Published : 22 Sep 2017 08:44 AM
Last Updated : 22 Sep 2017 08:44 AM
சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வரும் அரபு நாட்டு ‘ஷேக்’ குகள், ஹைதராபாத்தில் வசிக்கும் ஏழை, இஸ்லாமிய சிறுமிகளை போலி திருமணம் செய்துகொள்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக 8 ஷேக்குகள் உட்பட 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரெஹனா என்ற இளம்பெண்ணுக்கு மட்டுமே இதுவரை 17 முறை போலி திருமணம் நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரெஹனா தற்கொலை செய்துகொண்டார். பாத்த பஸ்தியைச் சேர்ந்த ருபீனா என்ற இளம்பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டைச் சேர்ந்த 76 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அந்த முதியவர் ருபீனாவை அரபு நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகுதான் தனது கணவருக்கு ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ளனர் என்பது ரூபீனாவுக்கு தெரிய வந்தது. அதன் பின்னர் ருபீனா அந்த வீட்டுக்கு வேலைக்காரியானார். ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்றதால், ருபீனாவை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஓமன் நாட்டைச் சேர்ந்த 5 ஷேக்குகள் ஹைதராபாத் பாத்த பஸ்திக்கு வந்துள்ளனர். அங்குள்ள சில லாட்ஜ்களில் தங்கி திருமணம் செய்துகொள்ள இளம் பெண்கள் தேவை என லாட்ஜ் உரிமையாளர்களிடம் கூறியுள்ளனர். அவர்கள், இடைத்தரகர்கள் உதவியுடன் பெண்களை ஏற்பாடு செய்தனர். இதற்காக ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசப்பட்டுள்ளது.
இந்த திருமணத்தை விரும்பாத ஒரு பெண், போலீஸாரிடம் புகார் செய்யவே துணை ஆணையர் சத்யநாராயணா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு மும்பையில் உள்ள முக்கிய மத போதகரை கைது செய்தது. மேலும் ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொண்ட 5 ஷேக்குகளை கைது செய்தனர். மேலும் 4 மத போதகர்கள், 5 இடைத்தரகர்கள் என் மொத்தம் 20 பேரை கைது செய்த போலீஸார், 12 சிறுமிகளை மீட்டுள்ளனர். மும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலும் 35 சிறுமிகளை திருமணம் செய்துகொள்ள ஷேக்குகள் திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT