Published : 07 Apr 2023 05:45 PM
Last Updated : 07 Apr 2023 05:45 PM

“ஜனநாயகத்தில் தணிக்கைக்கு இடமில்லை” - புதிய ஐடி விதிகளுக்கு சீதாராம் யெச்சூரி எதிர்ப்பு

சீதாராம் யெச்சூரி | கோப்புப்படம்

புதுடெல்லி: தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 சட்டத்தில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள திருத்தம் பேச்சுரிமையின் மீதான நேரடி தாக்குதல் என்றும், ஜனநாயகத்தில் தணிக்கைக்கு இடமில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மோடி அரசு கொண்டு வந்துள்ள திருத்தம் பேச்சு சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதலாகும். பாஜகவால் ‘போலி செய்திகள்’ எனக் குறிப்பிடப்படும் அனைத்துச் செய்திகளையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்பது மோசமான ஒரு முன்னுதாரணமாக மாறிவிடும். ஜனநாயகத்தில் தணிக்கைக்கு இடமில்லை. இந்தத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

புதிய திருத்தம்: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, தகவல் தொழில்நுட்ப விதிகள்- 2021-ல் வியாழக்கிழமை சில திருத்தங்களை அறிவித்தது. அதில் பிரதானமான ஒன்று, போலியான செய்திகளைக் கண்டறிய ஓர் உண்மை தன்மை அறியும் அமைப்பை நியமிப்பது என்பதாகும். இந்தப் புதிய விதி, மத்திய அரசு தொடர்பாக பதிய, பகிரப்படும் செய்திகளில் போலியான, உண்மைக்கு புறம்பான, தவறான தகவல்களை பரப்பும் செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் அதிகாரத்தை பிரஸ் இன்ஃப்ரமேஷன் பீரோவுக்கு (பிஐபி) வழங்குகிறது.

திருத்தப்பட்ட விதிகளின்படி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் இடைத்தரகர்களாக கருதப்படுவதால், அவை மத்திய அரசு பற்றிய தவறான, போலியான உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடவோ, பகிரவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இணைய நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை மத்திய அரசு பற்றிய தவறான, பிழையான செய்திகள் என உண்மைத் தன்மை அறியும் குழுவால் கண்டறியப்படும் செய்திகளை நீக்கத் தவறினால், அது அரசினால் வழங்கப்படும் பாதுகாப்பினை இழக்கலாம்" என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா வருத்தம்: மத்திய அரசின் இந்தத் திருத்தம் குறித்து, எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தொந்தரவு அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் மேற்கொண்டுள்ள திருத்தத்தால் தொந்தரவு அடைந்துள்ளோம். அந்தத் திருத்தத்தின்படி, ஒரு செய்தியின் உண்மை தன்மையை கண்டறியும் அதிகாரத்தை அரசு தனக்குத் தானே வழங்கியுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் விருப்பப்படி, ஒரு செய்தியை போலி, பொய்யான செய்தி என தீர்மானத்து, அதனை நீக்க இடைத்தரகர்களை (சமூக ஊடகங்களை) பணிக்க முடியும். ஒரு செய்தி போலியா இல்லையா என்பதை தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் அரசு தனக்கே வழங்கியுள்ளது.

மேலும், அரசின் அந்த உண்மை சரிபார்ப்பு பிரிவிற்கான, நீதித்துறை அதிகாரம், மேல்முறையீடு செய்வதற்கான உரிமை, உச்ச நீதிமன்றத்தின் ஸ்ரேயா சிங்கால் தீர்ப்பின் வழிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்த உத்தரவாதம் போன்ற எந்த வழிகாட்டுதல்களும் தெரிவிக்கப்படவில்லை. மிகவும் வருத்தமளிக்கக் கூடிய இந்த முடிவினை சம்மந்தப்பட்ட அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x