Published : 07 Apr 2023 05:30 PM
Last Updated : 07 Apr 2023 05:30 PM

“கற்றறிந்த பிரதமரே தேவை” - மோடிக்கு மணிஷ் சிசோடியா எழுதிய கடிதமும், கேஜ்ரிவாலின் கருத்தும்

மணிஷ் சிசோடியா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘இந்தியாவுக்கு கற்றறிந்த பிரதமரே தேவை’ என்று அவர் கூறியிருக்கிறார். டெல்லி திஹார் சிறையிலிருந்து அவர் இந்தக் கடிதத்தை பிரதமருக்கு எழுதியுள்ளார். அதன் பிரதியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அக்கடிதத்தின் விவரம் வருமாறு: ‘ஒரு பிரதமராக இருப்பவர், சாக்கடைக் கால்வாயில் ஒரு பைப்பை செருகி அதன் மூலம் கேஸ் எடுத்து தேநீர் போடலாம், உணவு சமைக்கலாம் என்று கூறும்போது என் மனம் வேதனையில் மூழ்குகிறது. மேகங்களுக்குப் பின்னால் செல்லும் விமானங்களை ரேடாரால் கண்டறிய முடியாது என்று அவர் கூறும்போது இந்த உலகமே அவரைப் பார்த்து நகைக்கிறது. பள்ளி, கல்லூரிக் குழந்தைகள் பிரதமரைக் கிண்டலடிக்கின்றனர்.

ஒரு வீடியோவில் பிரதமர் பேசுவதை நான் பார்த்தேன். அதில் பிரதமர், "நான் நிறைய படிக்கவில்லை. ஒரு கிராமத்துப் பள்ளியில்தான் படித்தேன்" எனக் கூறுகிறார். படிக்கவில்லை, குறைவாகப் படித்தேன் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் பெருமையா?

நாட்டின் இளைஞர்கள் எல்லோரும் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கின்றனர். அவர்கள் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாய்ப்புகளைத் தேடுகின்றனர். அவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பத்தில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், குறைந்த கல்வித் தகுதியுடைய ஒரு பிரதமரால் நம் இளைஞர்களின் கனவுகளுக்கு உதவ முடியுமா?

நாடு முழுவதும் 60 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒருபுறம் மக்கள் தொகை அதிகரிக்கிறது அதற்கேற்ப மறுபுறம் அரசாங்கம் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டாமா? அப்போதுதானே பெற்றோர் தனியார் பள்ளியை தவிர்த்து அரசுப் பள்ளியை நோக்கி வருவார்கள். அரசுப் பள்ளிகளை மூடுவது ஆபத்தானது. அரசாங்கம் கல்விக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கொடுக்க முடியவில்லை என்றால் நாடு எப்படி முன்னேறும்?.

பிரதமர் மோடி அறிவியல் புரியவில்லை. அவருக்கு கல்வியின் முக்கியத்துவமும் புரியவில்லை. 60 ஆயிரம் அரசுப் பள்ளிகள் ஒரு சில வருடங்களில் மூடப்பட்டிருப்பது ஆபத்தானது. அதேபோல் குறைந்த கல்வியறிவு கொண்ட பிரதமரும் ஆபத்தானவர். அதனால் நம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு படித்த பிரதமர்தான் தேவை’ என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

அவருடைய கடிதத்தை ஆமோதித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "ஆம், குறைந்த கல்வி கொண்ட பிரதமர் ஆபத்தானவர்" என்று ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x