Published : 07 Apr 2023 03:44 PM
Last Updated : 07 Apr 2023 03:44 PM

காலாவதியான வாகனங்களை அழிக்க கடன் தள்ளுபடி, வரிச் சலுகை: கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு நிதின் கட்கரி பதில்

திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு

புதுடெல்லி: “காலாவதியான வாகனங்களை அழிக்க முன்வரும் தனி நபர்களுக்கு வரிச் சலுகை வழங்குவது, அந்த வாகனங்கள் மீது நிலுவையில் உள்ள கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது” என்று திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.

முன்னதாக, பதினைந்து ஆண்டுகள் பழமையான வாகனங்களை அழிக்கும் திட்டத்தை அமல்படுத்துவது பற்றியும்; மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டம் பற்றியும் திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில் வருமாறு: சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வகையில், நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டையும் உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்கில் ஃபேம் இந்தியா (Faster Adoption and Manufacturing of Electric Vehicles - FAME INDIA) திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் இரண்டாவது கட்டம் 2019, ஏப்ரல் முதல் தேதி தொடங்கியது.

இதன்படி,மின்சாரத்தால் இயங்கும் 7090 பஸ்கள், 5 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள், 55 ஆயிரம் கார்கள், பத்து லட்சம் இரு சக்கர வாகனங்கள் என பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய போக்குவாத்து வாகனங்களுக்கு மானியம் வழங்க பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் 2023 ஜனவரி மாதம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. அதன்படி, முதல்முறை பதிவு செய்த நாளில் இருந்து பதினைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு புதுப்பித்தலுக்கான பதிவுச் சான்றிதழை வழங்க வேண்டாம் என்று போக்குவரத்து அலுவலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

எனினும், நாட்டின் பாதுகாப்புப் பணியில் உள்ள ராணுவம் மற்றும் பாதுகாப்புப்படை வாகனங்கள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் உள்ள வாகனங்கள் போன்றவற்றிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

31.03.2023 தேதி நிலவரப்படி, பதினைந்து ஆண்டுகளைக் கடந்த காரணத்தால் 7750 தனியார் வாகனங்களும், 3275 அரசுக்குச் சொந்தமான வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதுதவிர அரசுக்குச் சொந்தமான மேலும் 2,56, 935 வாகனங்கள் 15 ஆண்டுகள் என்ற காலக்கெடுவைக் கடந்து அழிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

இந்த காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டத்திற்கென மத்திய நிதியமைச்சகத்தின் கீழுள்ள செலவினங்கள் துறை மூலமாக மாநில அரசுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 2022 -23 ஆம் நிதியாண்டில் இதற்கென இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இது மூன்றாயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகையை முறையாகப் பிரித்தளிக்கவும், சரியாகப் பயன்படுத்தவும் வழிமுறைகள் வகுக்கப்பட்டு மத்திய மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

காலாவதியான வாகனங்களை அழிக்க முன்வரும் தனி நபர்களுக்கு வரிச் சலுகை வழங்குவது, அந்த வாகனங்கள் மீது நிலுவையில் உள்ள கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட சலுகைகள் இதில் அடங்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x