Published : 07 Apr 2023 03:48 PM
Last Updated : 07 Apr 2023 03:48 PM

“என் அரசர் புத்திசாலிதான். ஆனால்...” - காங்கிரஸ் தலைமையைக் கடுமையாக விமர்சித்த கிரண் ரெட்டி

பாஜகவில் இணைந்த கிரண் ரெட்டி

புதுடெல்லி: “என் அரசர் புத்திசாலிதான். ஆனால் அவர் சுயமாகவும் யோசிக்கமாட்டார். யாருடைய அறிவுரையையும் கேட்கமாட்டார் என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதுதான் காங்கிரஸ் தலைமையின் கதையும் கூட” என்று பாஜகவில் இணைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் ரெட்டி கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பாஜகவில் நேற்று இணைந்தார். இன்று (ஏப்.7) ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸில் முக்கியத் தலைவராகவும் இருந்த கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கிரண் ரெட்டி, ஜெய் சமைக்யாந்திரா என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். எனினும், அடுத்து வந்த தேர்தலில் எந்த தாக்கத்தையும் இந்தக் கட்சி ஏற்படுத்தாததை அடுத்து கடந்த 2018-ல் அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

பாஜகவில் இணைந்த பின்னர் அக்கட்சியின் டெல்லி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிரண்குமார் ரெட்டி, "நான், என் வாழ்வில் ஒருபோதும் காங்கிரஸை விட்டுச் செல்வேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் காரணம் காங்கிரஸின் தவறான முடிவுகள்தான். காங்கிரஸ் தலைமைக்கு மக்கள் தீர்ப்பை ஏற்று அதற்கேற்ப தன்னைத் திருத்திக் கொள்ளத் தெரியவில்லை.

காங்கிரஸ் தலைமையில் இருந்தவர்கள் அவர்களைத் தவிர எல்லோரும், ஏன் நாட்டு மக்களுமே கூட தவறு செய்கிறார்கள் என்று எண்ணம். அவர்களது இந்த மனப்பாங்கினால் என்ன நேர்ந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் தோல்வி ஏற்பட்டது. எல்லா மாநிலங்களிலும் கட்சி தோல்வியை சந்திக்கிறது. அவர்கள் மக்களுடன் பேசுவதில்லை. அவர்கள் கட்சிப் பிரமுகர்களின் கருத்தையும் கேட்பதில்லை. இது ஒரே ஒரு மாநிலத்தின் கதை மட்டுமல்ல. நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் கதையும் இதுவே.

ஒரு பழமொழி உண்டு. "என் அரசர் புத்திசாலிதான். ஆனால் அவர் சுயமாகவும் யோசிக்கமாட்டார். யாருடைய அறிவுரையையும் கேட்கமாட்டார்" என்பதே அது. அந்தப் பழமொழி காங்கிரஸுக்கும் பொருந்தும்" என்றார்.

நேற்று அனில் அந்தோணி, இன்று கிரண் ரெட்டி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பாஜகவில் நேற்று இணைந்தார். இன்று (ஏப்.7) ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸில் முக்கியத் தலைவராகவும் இருந்த கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கட்சித் தாவல் இருப்பது இயல்பு தான் என்றாலும் கூட நீண்ட காலமாக கட்சியில் இருந்தவர்கள், காங்கிரஸ் விசுவாசிகளாக அறியப்பட்டவர்கள் இப்படி பாஜகவில் ஐக்கியமாவது நிச்சயமாக நெருக்கடி என்று அரசியல் நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர்.

முன்னதாக நேற்று பாஜகவில் இணைந்த அனில் அந்தோணி அளித்த பேட்டியில், "காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும், ஒரு குடும்பத்துக்காகத்தான் பணியாற்றுவதாக நம்புகின்றனர். ஆனால், நான் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றியதாக நம்புகிறேன். உலகளவில் இந்தியாவை முன்னணிக்கு கொண்டுவருவது பற்றிய தெளிவான தொலைநோக்கு பிரதமரிடம் உள்ளது" என்று கூறியிருந்தார்.

ஏற்கெனவே காங்கிரஸிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத்தும், "காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அண்மையில் கூட தனது சுய சரிதையை வெளியிட்டுப் பேசிய அவர், காங்கிரஸில் முதுகெலும்பு இல்லாதவர்கள் மட்டுமே இருக்க முடியும்" என்று கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களை குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x