Published : 07 Apr 2023 06:31 AM
Last Updated : 07 Apr 2023 06:31 AM

டார்க்நெட், கிரிப்டோகரன்சியை பயன்படுத்தும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: என்சிபி விசாரணையில் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி: சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டார்க்நெட் இணையம் மற்றும் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி வருவதை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (என்சிபி) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டார்க்நெட் இணையம், கிரிப்டோகரன்சி, டிஜிட்டல் ஊடகம், யுபிஐ மற்றும் போலி கேஒய்சி ஆவணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வருவதை என்சிபி கண்டுபிடித்துள்ளது. விநியோகத்துக்காக அஞ்சல் மற்றும் கூரியர் சேவையையும் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல்காரர்கள் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். அத்துடன் இந்தியாவின் மேற்கு வங்கம்,குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம்,பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், இமாச்சல் மாநிலங்களிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சுமார் 11 மாதங்களாக என்சிபி நடத்திய சோதனை மற்றும் விசாரணை அடிப்படையில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 34.5 கிலோ ஹெராயின், 5.5. கிலோ மார்பின், 0.6 கிலோ ஓபியம், 23.6 கிலோ நர்கோட்டிக்ஸ் தூள், அசிட்டிக் அன்ஹைட்ரைடு, புல்லட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2 ஹெராயின் பதப்படுத்தும் ஆய்வகங்கள் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.

கடல் மார்க்கம் (முந்த்ரா துறைமுகம்), சாலை வழி (அட்டாரி-வாகா எல்லை) மற்றும் சர்வதேச எல்லை ஆகிய 3 வழிகளைப் பயன்படுத்தி போதைப்பொருளை கடத்தி உள்ளனர். மேலும் ஹவாலா வழியில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதை என்சிபி கண்டறிந்துள்ளது. கடத்தல்காரர்களின் 45 சொத்துகள், மதுபான பிராண்ட், ரியல் எஸ்டேட், பப்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல முன்னணி தொழில்கள், 190 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x