Published : 07 Apr 2023 04:27 AM
Last Updated : 07 Apr 2023 04:27 AM

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட பின்னணியில் என்ஜிஓ - மாநிலங்களவையில் தகவல்

புதுடெல்லி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த நிதியுதவி வழங்கியதாக டெல்லியைச் சேர்ந்த ‘தி அதர் மீடியா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் (என்ஜிஓ) மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுக் கழிவால் மக்களுக்கு உடல்நலப் பாதிப்பு உண்டாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். 2018-ல் போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டின. அந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தமிழக காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரானப் போராட்டங்களுக்குப் பின்னால், அந்நிய சதி இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு நிதி வழங்கியது தொடர்பாக ‘தி அதர் மீடியா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மீது புகார்கள் வந்துள்ளனவா என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நரன்பாய் ரத்வா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு நேற்றுமுன்தினம், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், “தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘தி அதர் மீடியா’, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரானப் போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் வந்துள்ளன.

அந்தப் புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2019-2021 காலகட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு ரூ.3.54 கோடி வெளிநாட்டு நிதி வந்துள்ளது.

இதில் ரூ.2.79 கோடியை அந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதிப் பயன்பாடு குறித்து விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மீதான குற்றாச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x