Published : 07 Apr 2023 05:23 AM
Last Updated : 07 Apr 2023 05:23 AM
அதானி குழு விவகாரம் தொடர்பாக கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் நாடாளுமன்றத்தில் இருந்து டெல்லி விஜய் சவுக் வரை மூவர்ண கொடிகளை ஏந்திபேரணி நடத்தினர். இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
ஜனநாயக கொள்கைகளைப் பற்றி பிரதமர் மோடி தலைமை யிலான பாஜக அரசு நிறையபேசுகிறது. ஆனால், அவர்கள்சொல்வது போல் செயல்படவில்லை. அதானி குழும முறைகேடுகள் குறித்து கூட்டுக் குழு விசாரணை கோருகிறோம். கூட்டுக் குழு அமைக்க பாஜக ஏன் பயப்படுகிறது. அதை திசை திருப்ப பாஜக உறுப்பினர்களே நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் இடையூறு செய்கின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒன்றுமில்லாமல் செய்துவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தில் பாஜக செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க ஒன்றிணைந்து போராடி வருகின்றன.
ரூ.50 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை வெறும் 12 நிமிடங்களில் நிறைவேற்றுகின்றனர். ஆனால், நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு விருப்பம் இல்லை என்று எங்களை பாஜக குற்றம் சாட்டுகிறது. இவ்வாறு கார்கே கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT