Published : 04 Sep 2017 09:20 PM
Last Updated : 04 Sep 2017 09:20 PM
மியான்மர் அடக்குமுறையிலிருந்து தப்பி இந்தியா வந்துள்ள 40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளிக்க மறுத்துவிட்டது.
இரண்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கள் சமூகம் மீண்டும் வலுக்கட்டாயமாக மியன்மார் நாட்டுக்கு அனுப்பிவிடக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியது.
இது குறித்து மத்திய அரசைப் பிரதிநிதித்துவம் செய்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷாம் மேத்தா எந்த வித உத்தரவாதங்களையும் அளிக்க மறுத்து விட்டார். அதாவது, “நான் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை” என்றார் திட்டவட்டமாக.
இன்று விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு செப்டம்பர் 11-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.
இரண்டு ரோஹிங்கியா முஸ்லிம்களான மொகமது சலிமுல்லா, மொகமது ஷாகிர் ஆகியோர் சார்பாக ஆஜரான பிரசாந்த் பூஷன் அமர்வின் முன்பாக உணர்ச்சிகரமான முறையீடு ஒன்றை வைத்தார்: “40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் உலகில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் எங்கு சென்றாலும் அங்கு அடக்குமுறைகளைச் சந்திக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்” என்றார்.
ஆனால் இப்போதைக்கு எதுவும் உறுதியாகக் கூற விரும்பாத நீதிபதிகள் அமர்வு, “நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட மனுவில், தங்களை இந்த நாட்டிலிருந்து வெளியேற்றும் முடிவு “நாட்டின் குடிமக்களோ இல்லையோ, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உத்தரவாதத்தை மீறுவதாகும்” என்று கூறியுள்ளது.
பன்னாட்டு உடன்படிக்கைகளில் ஒன்றான, “வலுக்கட்டாய வெளியேற்றமின்மை’ என்பதை அங்கீகரிக்கும் இந்தியாவின் கடமையை மறுத்து விடுவதாகும். தங்கள் நாட்டில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் அகதிகளை வலுக்கட்டாயமாக அனுப்புவதை பன்னாட்டுச் சட்டங்கள் அனுமதிப்பதில்லை என்று தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்
மத்திய உள்துறை மாநில அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கும் போது, ரோஹிங்கியர்கள் உட்பட சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அந்தந்த நாட்டுக்கு வெளியேற்ற வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகத் தெரிவித்ததையடுத்து ரோஹிங்கிய முஸ்லிம் சமூகத்தினர் கடும் பதற்றத்தில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT