Published : 06 Apr 2023 04:28 PM
Last Updated : 06 Apr 2023 04:28 PM
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சோனியா காந்தியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராகவும் கருதப்படுபவர் ஏ.கே.அந்தோணி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரது மகனான அனில் அந்தோணி, டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வி. முரளிதரன், கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில சமூக ஊடகப் பிரிவு தலைவராக இருந்த அனில் அந்தோணி, குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பிபிசி செய்தி நிறுவனம் கடந்த ஜனவரியில் ஆவணப்படம் வெளியிட்டதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார். இது இந்தியாவுக்கு எதிரான செயல் எனக் கூறி அவர் கண்டித்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து அனில் அந்தோணி விலகினார். இந்நிலையில், அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனில் அந்தோணி, ''காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்துக்காக வேலை செய்வதாகவே நம்புகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்வதாகவே நான் நம்பினேன். பன்முகத்தன்மை கொண்ட உலகில் இந்தியாவை முன்னணி இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் பிரமதர் மோடி செயல்பட்டு வருகிறார். அவரால் ஈர்க்கப்பட்டே பாஜகவில் இணைந்துள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி டெக் படித்த அனில் அந்தோணி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி முடித்தவர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரான அனில் அந்தோணி, பாஜகவில் இணைந்திருப்பதன் மூலம் கேரளாவில் அக்கட்சிக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT