Published : 06 Apr 2023 12:32 PM
Last Updated : 06 Apr 2023 12:32 PM
புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டத்தின் கடைசி நாளான இன்றும் தொடர் அமளிகள், முழக்கங்கள் காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களை 2 மணிக்கு மீண்டும் கூடுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்திய ஜனநாயகம் பற்றி லண்டனில் ராகுல் காந்தி பேசியது குறித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, முழக்கங்கள் எழுப்பி வந்தனர். இதனால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் ஒத்திவைப்பிலேயே சென்றது.
இந்தநிலையில், இரண்டாவது கட்ட கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் மக்களவையில் கூட்டத்தொடர் தொடங்கியதும் பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார். அதேபோல், மாநிலங்களவையிலும் அவைத் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பியதால் மாநிலங்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
கார்கே குற்றச்சாட்டு: "ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துவது நமது கடமை. அரசு அதனைக் கேட்க தயாராக இல்லையென்றால் அது பிடிவாதம். ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எதிர்க்கட்சிகளின் குரல்களை கேட்பது முக்கியம்" என்று மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் ‘மூவர்ணகொடி ஊர்வலம்’:நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விஜய் சவுக் வரை மூவர்ணக்கொடி ஊர்வலம் நடத்த திட்டமிடிருந்தன. இதன்படி பகல் 11.30 மணிக்கு அந்த ஊர்வலம் நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்கியது. அதன்பின்னர், அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திப்பார்கள் எனத் தெரிகிறது.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை கூறுகையில்,"நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் வரை வியாழக்கிழமை எதிர்க்கட்சிகளின் மூவர்ணகொடி ஊர்வலம் நடத்தப்படும். பின்னர் அங்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது என்ன நடந்தது என்று மக்கள் முன் வைக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
புதன்கிழமை மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் நாடாளுமன்ற அலுவல் அறையில் நடந்த கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி), திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரீய ஜனதாதளம்,ஜேஎம்எம், ஆர்எஸ்பி, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT