Published : 15 Sep 2017 08:32 AM
Last Updated : 15 Sep 2017 08:32 AM
கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 29-ம் தேதி நள்ளிரவு நேரம். இந்திய கமாண்டோக்கள் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பதுங்கிப் பதுங்கி செல்கின்றனர். 2 கி.மீ. தூரத்தில் ஜெய்ஷ் -இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் முகாம்கள். பாகிஸ்தான் ராணுவம் அவர்களுக்கு எல்லா பயிற்சியும் அளித்து தயார் நிலையில் வைத்திருந்தது. அவர்கள் எந்த நேரமும் இந்தியாவுக்குள் ஊடுருவலாம் என்ற ரகசிய தகவல் உளவாளிகள் மூலம் தெரிய வந்தது. அவர்களை ஊடுருவ விட்டு அழிப்பதைவிட, இருக்கும் இடத்திலேயே அழிக்க முடிவு செய்தது இந்திய ராணுவம். இதையடுத்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லியத் தாக்குதலுக்குக் கிளம்பினர் இந்திய கமாண்டோக்கள் 19 பேர்.
இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட, ஆங்கிலப் படங்களை மிஞ்சும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தனர் இந்திய கமாண்டோக்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் இந்த அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
எப்படி உருவானது இந்த தாக்குதல் திட்டம்? இத்தனை நாள் இல்லாமல் திடீரென இப்படி ஒரு அதிரடித் தாக்குதல் நடத்த வேண்டிய காரணம் என்ன? தாக்குதல் நடந்து ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு வெளிவந்துள்ள புத்தகம் இதற்கான காரணங்களை விளக்குகிறது. ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதியுள்ள, `இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ்: ட்ரூ ஸ்டோரிஸ் ஆப் மாடர்ன் ஹீரோஸ்' என்ற புத்தகம்தான் அது. பெங்குயின் இந்தியா பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் மொத்தம் 14 உண்மை சம்பவங்கள். நினைத்துக் கூடப் பார்க்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய வீரத்தை விளக்குகின்றன இந்தக் கதைகள். அதில் ஒன்றுதான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய வீரர்கள் தீவிரவாத முகாம்களை அழித்த உண்மைக் கதை.
காஷ்மீரின் யூரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி ஜெய்ஷ்-இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதிகாலை 5.30 மணிக்கு 4 தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 நிமிடத்தில் 17 கையெறி குண்டுகளை வீசினர் தீவிரவாதிகள். இருதரப்புக்கும் இடையே சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த மேலும் 2 வீரர்கள் மரணமடைய, பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இந்த சம்பவம்தான் இந்தியாவின் துல்லியத் தாக்குதலுக்கு காரணம். சரியான நேரத்தில் இதற்கு சரியான பதிலடி கொடுப்போம் என இந்தியா சார்பில் அப்போது கூறப்பட்டது.
சரியாக 10 நாள் கழித்து 29-ம் தேதி இரவு துல்லியத் தாக்குதல் ஆரம்பமானது. இந்தியாவின் உளவு அமைப்புகளான இன்டெலிஜென்ஸ் பீரோவும் (ஐ.பி.), ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் (ஆர்ஏடபிள்யூ - ரா) அமைப்பும் திட்டம் வகுத்துக் கொடுத்தன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் இருக்கும் உளவாளிகள் கூறிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. அவர்களில் 2 உளவாளிகள் ஜெய்ஷ்-இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பணம் கொடுத்து பல ஆண்டுகளுக்கு முன்பே உளவாளிகளாக மாற்றியிருந்தனர் இந்திய உளவு அமைப்பினர். தாக்குதலுக்குத் திட்டமிட்டது 4 இலக்குகள். எல்லையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில், 500 மீட்டர் இடைவெளியில் 4 தீவிரவாதிகளின் முகாம்கள். இரண்டிலும் பயிற்சி முடித்த 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள். காவலுக்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என அனைத்து தகவல்களையும் உளவாளிகள் கொடுத்தனர்.
இருட்டத் தொடங்கியதும் இந்திய பீரங்கிகள், பாகிஸ்தான் நிலைகளை நோக்கி குண்டுகளை பொழிந்தன. பதிலுக்கு அங்கிருந்தும் பீரங்கித் தாக்குதல் நடந்தது. எதிரிகளின் கவனம் திசை திரும்பிய நேரத்தில் ரகசியமாக இந்திய ராணுவ கமாண்டோக்கள் 19 பேர், மேஜர் டாங்கோ (பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றப்பட்டுள்ளது) தலைமையில் எல்லை தாண்டினர். அங்கேயே பதுங்கியிருந்தனர். இரவு 2 மணிக்கு தீவிரவாதிகளின் முகாம்கள் நோக்கி நகர்ந்தனர். இஸ்ரேல் தயாரிப்பான டவோர் டார் -21 துப்பாக்கிகள், இன்ஸ்டாலஸா ராக்கெட் லாஞ்சர்கள், கலீல் ஸ்னைபர் ரைபிள், இரவில் பார்க்க வசதியாக கண்ணாடிகளோடு களம் புகுந்தனர். 3 பிரிவுகளாக பிரிந்து சென்ற கமாண்டோக்கள், ஒரே நேரத்தில் 4 இலக்குகளை நோக்கி அதிகாலை 3.30 மணிக்குத் தாக்குதலைத் தொடங்கினர். தீவிரவாதிகள் சுதாரிப்பதற்குள் ராக்கெட் குண்டுகள் பாயத் தொடங்கின. என்ன நடக்கிறது எனத் தெரியாமலேயே தீவிரவாதிகள் மடியத் தொடங்கினர். தப்பிய தீவிரவாதிகளை ஸ்னைபர் துப்பாக்கிகளும் ரைபிள்களும் பதம் பார்த்தன. மொத்தம் ஒரு மணி நேரமும் இடைவிடாத குண்டு சத்தம். முகாம்களில் பதுங்கியிருந்த அத்தனை தீவிரவாதிகளும் இந்திய கமாண்டோக்களின் தாக்குதலுக்கு பலியாயினர். அவர்களுக்கு காவல் இருந்த 2 பாகிஸ்தான் ராணுவத்தினரும் கமாண்டோக்களின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. குண்டடிபட்டு இறந்து போனார்கள்.
தாக்குதல் முடிந்ததும் மீண்டும் பாதுகாப்பாக திரும்ப ஆயத்தமாயினர் இந்திய வீரர்கள். 3 பிரிவாக பிரிந்து நின்றவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்தனர். வந்த வழியே திரும்பினால் ஆபத்து என்பதால் சுற்றுப் பாதையை தேர்வு செய்தார் டாங்கோ. இதற்கிடையில் துப்பாக்கி சத்தம் கேட்டு தாமதமாக விழித்துக்கொண்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட ஆரம்பித்தனர்.
“யாருக்கும் தெரியாமல் எளிதாக உள்ளே போய் விட்டோம். ஆனால் திரும்புவது அவ்வளவு சுலபம் இல்லை எனத் தெரியும். தரையில் தவழ்ந்தபடி வீரர்கள் எல்லை நோக்கி சுற்றுப் பாதையில் திரும்பத் தொடங்கினர். கொஞ்சம் தொலைவுதான், ஆனால் பாதுகாப்பான பாதை என்பதால் அதைத் தேர்வு செய்தேன். பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் சுடத் தொடங்கினர்.
அவர்கள் உயரமான கண்காணிப்பு கோபுரங்களில் இருந்ததால், அவர்களைத் தாக்கி அழிப்பது சுலபமாக இருந்தது. தவழ்ந்து செல்லும் இந்திய வீரர்களுக்கு அருகில் இருந்த மரங்களில் தோட்டாக்கள் பட்டு தெறித்தன. குண்டு சத்தம் ஓயும்போது, கொஞ்சம் தொலைவை ஓடிக் கடந்தனர் வீரர்கள். தலையை ஒட்டி குண்டுகள் பாய்ந்தன. 60 மீட்டர் தொலைவைக் கடப்பதுதான் மிகவும் ஆபத்தாக இருந்தது. அதிகாலை 4.30 மணிக்கு இந்திய எல்லையைத் தொட்டு விட்டோம். முதல் குண்டு சுட ஆரம்பித்ததில் இருந்து, கடைசி குண்டு சத்தம் வரை மொத்தமே ஒரு மணி நேரம்தான் இந்தத் தாக்குதல் நடந்தது” என்கிறார் தாக்குதலுக்கு தலைமை வகித்த மேஜர் டாங்கோ.
போர் விமானங்களை பயன்படுத்தவில்லை
பொதுவாக துல்லியத் தாக்குதலின்போது விமானங்களை பயன்படுத்துவதுதான் வழக்கம். எதிரிகளின் பகுதியில் உள்ள முக்கிய இலக்குகளை குண்டு வீசித் தாக்கிவிட்டு நிமிடங்களில் பத்திரமாக விமானங்கள் வந்துசேர்ந்துவிடும். ஆனால், இந்த துல்லியத் தாக்குதலில் விமானங்கள் இடம்பெறவில்லை. தரைவழியாகவே சென்று வீரர்கள் தாக்கியுள்ளனர்.
மேலும் யூரி பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி என்பதால், அந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் சகாக்களே இதற்கு தேர்வு செய்யப்பட்டனர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது என்கிறார் டாங்கோ. `நேற்று வரை நம்மோடு பணியாற்றிய வீரர்கள் எதிரிகளால் கொல்லப்பட்டால், வீரர்களுக்கு ஒரு ஆவேசம் வரும். அதை பயன்படுத்துக் கொண்டோம். தாக்குதல் திட்டமிட்டபடி மிகப் பெரிய வெற்றி' என்கிறார் டாங்கோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT