Published : 05 Apr 2023 09:03 PM
Last Updated : 05 Apr 2023 09:03 PM
புதுடெல்லி: தேசிய மின்கட்டமைப்பிற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் அளித்த மின்சாரப் பங்கு என்ன என்று டி.ரவிக்குமார் எம்.பி. மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பிரதமர் அலுவல் துறையின் மத்திய இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர பிரசாத் விரிவான பதிலளித்தார்.
விழுப்புரம் மக்களவை தொகுதி எம்.பி டி.ரவிக்குமார் இன்று மக்களவையில் எழுப்பிய கேள்வியில், ‘செலவழிக்கப்பட்ட அணு எரிபொருளை(எஸ்என்எப்) சேமிப்பதற்கு ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? KNPP வளாகத்திற்குள் எஸ்என்எப் அணு உலைக்கு அப்பால் நிரந்தரமாக சேமித்து வைக்கும் முடிவைப் பற்றி மத்திய அரசு தமிழ்நாடு மாநில அரசிடம் கலந்தாலோசித்ததா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன?’ எனக் கேட்டிருந்தார்.
திமுக எம்பியின் கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் அளித்த பதில் பின்வருமாறு: 2021-22 ஆம் ஆண்டில், KKNPP 1&2 (2X1000 MW) 14536 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது, இது மொத்த மின்சார உற்பத்தியில் ஒரு சதவிகிதம் ஆகும். எஸ்என்எப் சேமிப்பதற்கான முதல் இடம் அணு உலை செலவழிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு கட்டிடத்தில் அமைந்துள்ளது, இது பொதுவாக செலவழிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு குளம் அல்லது விரிகுடா என அழைக்கப்படுகிறது.
மேற்கூறியவற்றைத் தவிர, அணு உலைக்கு அப்பால், செலவழிக்கப்பட்ட எரிபொருளைச் சேமித்து வைக்க, ஆலை வளாகத்திற்குள், அவே ஃப்ரம் ரியாக்டர் (ஏஎஃப்ஆர்) வசதி எனப்படும் மற்றொரு சேமிப்பு வசதி உள்ளது. இந்தியா ஒரு மூடிய எரிபொருள் சுழற்சிக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது, இதன் கீழ், திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான எரிபொருளைப் பெற எஸ்என்எப் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, எஸ்என்எஃப் என்பது அது மறுபயன்பாட்டுக்கு அனுப்பப்படும் வரை ஆலை வளாகத்திற்குள் இருக்கும் ஏஎஃப்ஆர் வசதியில் தற்காலிகமாக மட்டுமே சேமித்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏஎப்ஆர்கள் ஏற்கெனவே மகாராஷ்டிராவில் தாராபூர், மற்றும் ராஜஸ்தானில் ராவத்பட்டா ஆகிய இடங்களிலும் கட்டப்பட்டு செயல்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் எழுத்து மூலமான பதில் குறித்து திமுக எம்பி டி.ரவிக்குமார் கூறும்போது, “ஏஎஃப்ஆர் வசதியை ஏற்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது. அதுமட்டுமின்றி அந்த வளாகத்துக்குள்ளேயே எஸ்என்எஃப்-ஐ புதைத்து வைக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதையும் மீறி ஒன்றிய அரசு அதைச் செய்துள்ளது” எனக் கருத்து கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT