Published : 05 Apr 2023 07:44 AM
Last Updated : 05 Apr 2023 07:44 AM
புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை அறிவித்துள்ள நிலையில், புதிய பெயர்களை சூட்டுவதன் மூலம் உண்மையை மாற்றிவிட முடியாது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி, அம்மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை சீனா எப்போதும் ஜாங்னான் என்று குறிப்பிட்டு வருகிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தை உரிமை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக அங்குள்ள 11 இடங்களுக்கு சீனா கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பெயர்களை சூட்டியது. சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் வெளியிட்ட இந்தப் பட்டியலில் 2 நிலப் பகுதிகள், 2 குடியிருப்பு பகுதிகள் 5 மலைச்சிகரங்கள், 2 ஆறுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு சீனா இதுபோல் மறு பெயரிடுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் 2017-ல் 6 இடங்களுக்கும் 2021-ல்15 இடங்களுக்கும் சீனா புதிய பெயரை சூட்டியது. அந்த சந்தர்ப்பங்களிலும் சீனாவுக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “சீனாவின் அத்தகைய அறிக்கையை நாங்கள் பார்த்தோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. அது தொடர்ந்து எப்போதும் அவ்வாறு இருக்கும். புதிய பெயர்களை சூட்டும் முயற்சியால் உண்மையை மாற்றிவிட முடியாது” என்று கூறியுள்ளார்.
ஜி20 மாநாடு தொடர்பான பிரதிநிதிகளின் கூட்டத்தை இந்தியா அண்மையில் அருணாச்சல பிரதேசத்தில் நடத்தியது. இதில் சீனா பங்கேற்கவில்லை. அந்தக் கூட்டம் நடைபெற்ற ஒரு வாரம் கழித்து சீனா புதிய பெயர்களை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT