Published : 04 Apr 2023 04:06 PM
Last Updated : 04 Apr 2023 04:06 PM

“மோடியின் கல்வித் தகுதிக்காக அல்ல, அவரது வசீகரத்துக்காகவே மக்கள் வாக்களித்தனர்”- அஜித் பவார்

அஜித் பவார் | கோப்புப்படம்

மும்பை: "கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி மீதான வசீகரமே பாஜகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததே தவிர, அவரது கல்வித் தகுதி அல்ல. இதைப் பற்றி பேசுவதைவிட வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் என நாட்டில் பல முக்கியமாக பிரச்சினைகள் உள்ளன" என்று தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கல்வித் தகுதி பற்றி எதிர்க்கட்சியினர் சர்ச்சையை கிளப்புவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அஜித் பவார், "கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், மக்கள் அவரின் (மோடியின்) கல்வித் தகுதியைப் பார்த்தா வாக்களித்தனர்? அந்தத் தேர்தலில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜகவுக்கு அதுவரை இல்லாத ஒரு வசீகரத்தை அவர் உருவாக்கினார். அதற்காக முழு பெருமையும் மோடியையேச் சேரும்.

கல்வித் தகுதியில் என்ன இருக்கிறது? நமது ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெருவதே முக்கியம். மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் பெரும்பான்மை பெரும் கட்சி தலைமையேற்கிறது. நமது மாநிலத்திலும், 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 145-146 இடங்களில் வெற்றி பெரும் கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராகிறார். மருத்துவத் துறையில் ஒரு மருத்துவராக பயிற்சி செய்வதற்கு எம்பிபிஎஸ் பட்டம் மிகவும் அவசியம். ஆனால், அரசியலில் அப்படியான ஒரு விஷயம் இல்லை.

அவர் (மோடி) கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மோடி மற்றும் சில அமைச்சர்களின் கல்வித் தகுதி குறித்த பிரச்சினை மீண்டும் தோண்டி எடுக்கப்படுகிறது. அது அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை. ஆனால் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்றவை பிரதானமான பிரச்சினை. சமையல் எரிவாயு, அத்தியவாசிய பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. நாம் யாரும் இதைப்பற்றி விவாதிக்க விரும்பவில்லை.தொழிலாளர்கள் விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை. மோடியின் கல்வித் தகுதி பற்றிய சர்ச்சைக்கு அத்தனை முக்கியத்துவம் தரவேண்டும் என்று நான் கருதவில்லை" என்று அஜித் பவார் கூறினார்.

சிவசேனா - உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ராவத், “பிரதமர் மோடி தனது கல்வித் தகுதியைப் பற்றி அறிவிக்க முன்வர வேண்டும். அவரது பட்டம் நாடாளுமன்றத்தின் வாசலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) வழங்க உத்தரவிடக் கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் (சிஐசி), பிரதமர் மோடியின் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு சான்றிதழ் விவரங்களை வழங்குமாறு, பிரதமர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு அதிகாரி, குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களின் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில், குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரேன் வைஷ்ணவ், தலைமை தகவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்களை பிரதமர் அலுவலகம், குஜராத் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்கள் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x