Published : 04 Apr 2023 10:10 AM
Last Updated : 04 Apr 2023 10:10 AM
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற மாநில காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் சமீபத்தில் கோயில் அர்ச்சகர்கள் பிரிவை உருவாக்கினார். இதன் தலைவராக சுதிர் பார்தி நியமிக்கப்பட்டுள்ளார். இது, பாஜகவுக்கு போட்டியாக இந்துக்களின் வாக்குகளை ஈர்க்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தலைநகர் போபாலில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் கோயில் அர்ச்சகர்கள் பிரிவின் சார்பில் நேற்று முன்தினம் ‘தர்ம் சம்வத்’ என்ற பெயரில் மத மாநாடு நடைபெற்றது. இதையொட்டி அலுவலக வளாகம் முழுவதும் காவி கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் உள்ள மடாதிபதிகள், கோயில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற கமல்நாத், “விரைவில் நடைபெற வுள்ள தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அப்போது அர்ச்சகர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என உறுதி அளித்தார்.
இந்த சூழ்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளதால் காங்கிரஸ் காவிமயமாகி விட்டதை காவி கொடிகள் குறிக்கின்றனவா என கமல்நாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து கமல்நாத் கூறும்போது, “காவி நிறத்துக்கு பாஜக வணிக முத்திரை பெற்றிருக்கிறதா என்ன? அல்லது காவி நிறத்தை அவர்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்களா? இந்து மதத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதாக பாஜக கூறிக் கொள்கிறது.
நம் அனைவருக்கும் மத உணர்வுகள் இருக்கின்றன. ஆனால் அரசியல் தளத்தில் நாங்கள் வெளிப்படுத்துவதில்லை. நாங்கள் கோயில்களுக்கு சென்றால் பாஜக ஏன் அச்சப்படுகிறது? காங்கிரஸ் தலைமையகத்தில் காவிக் கொடியை ஏற்றினால் பாஜகவுக்கு ஏன் வலிக்கிறது?” என கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT