Published : 04 Apr 2023 08:10 AM
Last Updated : 04 Apr 2023 08:10 AM

மாதத்தில் 20 நாள் மக்களை சந்திக்க வேண்டும்: அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களுக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: ஆந்திராவில் அடுத்த வருடம் மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற எம்எல்சி தேர்தலில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏ.க்கள் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். இது முதல்வர் ஜெகன்மோகனுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் அமராவதியில் நேற்று அமைச்சர்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் முதல்வர் ஜெகன் பேசியதாவது. ‘வீட்டுக்கு வீடு நமது அரசு’ திட்டத்தின்படி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அனைவரும் வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா, தொகுதியில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்று கேட்டறிந்து அவற்றை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த
வேண்டும்.

பிறகு அப்பிரச்சினை தீர்க்கப் பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் என வரும் ஆகஸ்ட் மாதம் வரை மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

25 எம்எல்ஏக்களின் செயல்பாடு

வரும் 13-ம் தேதி முதல் ‘ஜெகன் அண்ணாவிடம் சொல்வோம்’ எனும் பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி மக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும். 25 எம்எல்ஏக்களின் செயல்பாடு மந்தமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் மக்களிடம் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள வேண்டும். ஆந்திராவில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. இவ்வாறு முதல்வர் ஜெகன் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சிலர் பங்கேற்வில்லை. அவர்கள் வேறு கட்சியில் இணைந்து ஜெகனுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x