Published : 04 Apr 2023 07:39 AM
Last Updated : 04 Apr 2023 07:39 AM
ஹைதராபாத்: நாடு முழுவதும் வசிக்கும் 66.9 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை (Personal Data) விற்பனைக்கு வைத்தது தொடர்பாக 3 வங்கிகள் உட்பட 11 நிறுவனங்களுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 16.8 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை சில நிறுவனங்கள் மூலம் சேகரித்து, அவற்றை சிலர் விற்பனை செய்ய முன்வந்த தகவல் தெரிய வந்தது. இது தொடர்பாக சைபராபாத் போலீஸார் 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வங்கிகளில் கடன் வாங்க விண்ணப்பித்தோர், தனியார் வாகன பதிவு காப்பீடுக்காக விண்ணப்பித்தோர், ஆன்லைனில் பொருட்கள் வாங்க முழு விவரங்களை வழங்கியோர், டிஜிட்டல் பணப் பரிவர்தனை செய் வோர் உள்ளிட்டோரின் விவரங்களை சில நிறுவனங்களிடமிருந்து வாங்கிய வினய் பரத்வாஜ் என்பவர் அவற்றை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
24 மாநிலத்தவரின் தகவல்
இதைத் தொடர்ந்து வினய் பரத்வாஜை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுவரை அவர் 24 மாநிலங்களைச் சேர்ந்த டாக்டர்கள், ராணுவத்தினர், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என மொத்தம் 104 பிரிவுகளைச் சேர்ந்த 66.9 கோடி பேரின் முழு விவரங்களை சேகரித்து அவற்றை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேற்கண்ட 66.9 கோடி பேரின் முழு விவரங்களை சில சமூக வலைதளங்கள் மூலமாகவும், மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாகவும் வினய் பரத்வாய் சேகரித்துள்ளார். இவருக்கு உதவிய 3 வங்கிகள் உட்பட மொத்தம் 11 நிறுவனங்களுக்கு சைபராபாத் போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
கடும் நடவடிக்கை
அதில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள் சைபராபாத் கிரைம் பிரிவில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்படி ஆஜராகாவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT