Published : 03 Apr 2023 06:12 PM
Last Updated : 03 Apr 2023 06:12 PM

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கோபம் கொள்ளக் கூடாது: சசி தரூர்

புதுடெல்லி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கோபம் கொள்ளக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற நாடுகளை விமர்சிக்கும் கெட்ட பழக்கம் மேற்கத்திய நாடுகளுக்கு நீண்ட காலமாக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருவனந்தபுரம் எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர், “ஜெய்சங்கரை நான் நீண்டகாலமாக அறிவேன். அவரை நான் எனது நண்பராகவே கருதுகிறேன். ஆனால், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நாம் விமர்சனங்களை ஏற்க மறுப்பவராக இருக்கத் தேவையில்லை.

அரசு என்ற வகையில் நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு கருத்துக்கும் நாம் எதிர்வினையாற்றத் தொடங்கினால், உண்மையில் நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வதாக ஆகிவிடும். எனவே, எனது நல்ல நண்பர் ஜெய்சங்கரிடம், இதுபோன்ற விஷயங்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவேன். மேற்கத்திய நாடுகளை விமர்சிக்கும் விஷயத்தை நீங்கள் ஒரு பூங்காவில் சில இளைஞர்கள் மத்தியில் கூறலாம். ஆனால், அது உலக அளவில் எதிரொலிக்கும்போது நன்றாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன? - ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி இழப்பு விவகாரத்தை தாங்கள் கவனிப்பதாக சமீபத்தில் ஜெர்மனி தெரிவித்திருந்தது. பெங்களூருவில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்ற ஜெய்சங்கர், அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சுமார் 500 இளைஞர்கள் மத்தியில் சகஜமாக கலந்துரையாடினார். அப்போது, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிடுவது குறித்து இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், பிற நாடுகளை விமர்சிக்கும் கெட்ட பழக்கம் மேற்கத்திய நாடுகளுக்கு இருக்கிறது. இது தங்களுக்கு கடவுள் கொடுத்த உரிமை என அவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x