Last Updated : 02 Apr, 2023 05:04 AM

 

Published : 02 Apr 2023 05:04 AM
Last Updated : 02 Apr 2023 05:04 AM

சிலிகுரியில் ஜி20 கூட்டம் | சாகச சுற்றுலாவுக்கு இந்தியாவில் பல வாய்ப்புகள் - அமைச்சர் கிஷண் ரெட்டி பெருமிதம்

மேற்குவங்கம் சிலிகுரியில் நடந்த ஜி20 கூட்டத்தில் நேற்று பங்கேற்ற மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, நேற்று இரவு அங்குள்ள தேயிலை தோட்டத்தை பார்வையிட்டார்.

புதுடெல்லி: சாகச சுற்றுலாவுக்கு இந்தியாவில் பல வாய்ப்புகள் உள்ளன என சிலிகுரியில் நடந்த ஜி20 மாநாட்டின் இரண்டாவது செயல்பாட்டு கூட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.

சர்வதேச அளவிலான ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக நாட்டின் பல பகுதிகளில் ஜி20க்கான செயல்பாட்டு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மகராஷ்டிராவின் புனேவில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற முதல் கூட்டத்துக்கு பின் இரண்டாவது கூட்டம் மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் நேற்று தொடங்கியது.

இந்த கூட்டத்துக்கு இடையே, சிலிகுரி அருகிலுள்ள டார்ஜிலிங்கின் குர்சியோங்கில், சாகச சுற்றுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது: இயற்கை சாகச சுற்றுலாவுக்கு இந்தியாவில் பல வாய்ப்புகள் உள்ளன. சாகச சுற்றுலா என்பது ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு பாதை அமைக்கிறது.

இந்தக் கலந்துரையாடலை நடத்த, இமயமலையின் அடித்தளமான குர்சியோங் பொருத்தமான இடம். இந்த இமயமலை, சாகசங்கள் புரிய உலகின் மிகச் சிறந்த களமாக உள்ளது. இயற்கையின் நான்கு உறுப்புகளான நிலம், நீர், வானம், காற்று ஆகியவற்றின் சாகசச் சுற்றுலாவுக்கு இந்தியாவில் பல வாய்ப்புகள் உள்ளன. இமயமலையின் 70 சதவீதம் பகுதி இந்தியாவில் அமைந்துள்ளது. இதில் ஏழு முக்கிய ஆறுகள் உருவாகி 700 கி.மீட்டருக்கு ஓடுகின்றன.

இதனால், சாகச சுற்றுலாவுக்குஇந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மகத்தான புகழ் கிடைத்து வருகிறது. இதை மேலும் சிறப்பாக்க இந்திய அரசு கொள்கை ரீதியாக பல உத்திகளை உருவாக்க உள்ளது.

இதற்காக பிரதமர் நரேந் திர மோடி பலவகைகளில் ஊக்குவித்து வருகிறார். இதன் பயனாக, மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்களில் இளைஞர் சுற்றுலா கிளப்புகளை அமைத்து வருகிறது.

இதன்மூலம், சாகசச் சுற்றுலா வளரும். சாகச சுற்றுலாவில் இந்தியாவுக்கு உலகின் சிறந்த இடத்தை பெற்றுத்தருவது எங்கள் நோக்கம். இவ்வாறு அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஜி20 உறுப்பினர்களான ரஷ்யா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 17 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக சிங் கப்பூர் ஸ்பெயின், நைஜீரியா, ஒபன், மொரிஷீயஸ், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x