Published : 01 Apr 2023 11:21 AM
Last Updated : 01 Apr 2023 11:21 AM

கர்நாடகாவில் ஜெய் பாரத் பேரணி: எம்.பி. பதவி இழப்புக்குப் பின்னர் ராகுல் காந்தி பங்கேற்கும் முதல் கூட்டம்

புதுடெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகாவில் 'ஜெய் பாரத்' பேரணியை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. வரும் 9ஆம் தேதி கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இந்தப் பேரணியை மேற்கொள்கிறார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாரில் ராகுல் காந்தி 'ஜெய் பாரத்' பேரணி மேற்கொள்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி ராகுல் காந்தி வயநாட்டில் பிரச்சாரம் செய்கிறார். அவர் மக்களின் குரல். அவரை ஒருபோதும் மவுனமடையச் செய்ய முடியாது. அவரது குரல் இன்னும் சத்தமாக, வலிமையாக ஒலிக்கும்" என்று கூறியுள்ளார்.

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்ட பின்னர் அவர் கலந்து கொள்ளும் முதல் பேரணி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் பேரணி மீது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2024ல் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பாஜகவுக்கு அதன் பலத்தை நிரூபிக்கவும், காங்கிரஸுக்கு அதன் வலிமையை பறைசாற்றவும் முக்கியமான களமாக உள்ளது. இதற்கிடையே கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளுக்கு விடைகொடுத்துவிட்டு தங்களையே ஆதரிப்பர் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே 2018ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அங்கு தொங்கு சட்டப்பேரவை உருவானது. பாஜக தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. காங்கிரஸ் 80, ஜேடிஎஸ் 37 சீட்கள் வைத்திருந்தன. காங்கிரஸ் அதிக சீட்கள் வைத்திருந்தாலும் கூட மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் குமாரசாமியை முதல்வராக்கியது. ஆனால் 2019 ஜூலையில் எம்எல்ஏ.,க்கள் கட்சித் தாவலால் அந்த ஆட்சி கலைந்தது. பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா முதல்வரானார். ஆனால் அவர் ஜூலை 2021ல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பசவராஜ் பொம்மை முதல்வரானார். தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தாலும்கூட அது மீண்டும் அதனைத் தக்கவைக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. முன்னதாக நேற்று கட்டி கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பசவராஜ் பொம்மை "வரும் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x