Published : 31 Mar 2023 04:51 PM
Last Updated : 31 Mar 2023 04:51 PM
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்க உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எம்ஏ பட்டம் பெற்றதற்கான சான்றிதழ் நகலை வழங்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய தகவல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அவரது கடித்தைப் பரிசீலித்த அப்போதைய மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சாரியலு, பிரதமர் மோடி முதுகலை பட்டம் பெற்றதற்கான சான்றிதழின் நகலை அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்க நரேந்திர மோடி படித்த குஜராத் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
மத்திய தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரேன் வைஷ்ணவ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களின் பட்ட சான்றிதழ் நகல்களை வழங்க முடியாது. இது மாணவர்களின் தனி உரிமையை மீறும் செயலாகும். பிரதமர் பட்டம் பெற்றதன் விவரங்கள் ஏற்கனவே பொதுவெளியில் உள்ளன. பல்கலைக்கழக இணையதளத்தில் ஏற்கனவே இது வெளியாகி இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துவது குழந்தைத்தனமானது'' என வாதிட்டார்.
இதற்கு அரவிந்த் கேஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பெர்சி கவினா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சொலிசிட்டர் ஜெனரல் கூறியதுபோல் பிரதமரின் பட்டம் குறித்த தகவல் பொதுவெளியில் இல்லை என்றார். மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர குஜராத் பல்கலைக்கழகத்தை எது தூண்டியது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, மத்திய தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு கடந்த 2006 ஜூலையில் குஜராத் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிரேன் வைஷ்ணவ் இன்று வழங்கினார். அதில், ''பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் நகலை குஜராத் பல்கலைக்கழகம் வழங்கத் தேவையில்லை. இந்த வழக்கை தொடர்ந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது'' என தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை அடுத்து இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், ''பிரதமரின் பட்டப் படிப்பைத் தெரிந்துகொள்ளக்கூட ஒரு நாட்டுக்கு உரிமை இல்லையா? சான்றிதழ் நகலைக் காட்ட நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பை தெரிவிப்பது ஏன்? அவரது பட்டப்படிப்பு சான்றிதழ் நகலைப் பார்ப்பது தவறா? என்ன நடந்து கொண்டிருக்கிறது? படிப்பறிவு இல்லாத அல்லது குறைவான படிப்பறிவு கொண்ட ஒரு பிரதமர் நாட்டிற்கு ஆபத்தானவர்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT