Published : 31 Mar 2023 09:03 AM
Last Updated : 31 Mar 2023 09:03 AM
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோயில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 40 அடி ஆழமுள்ள பழங்கால கிணறு உள்ளது. கான்கிரீட் சிலாப் கொண்டு இந்த கிணறு மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று ராமநவமியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கிணற்றின் கான்கிரீட் சிலாப் மீது அதிக பக்தர்கள் ஏறியதால் பாரம் தாங்காமல் சிலாப் மற்றும் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், பக்தர்கள் கிணற்றில் விழுந்து, இடிபாடுகளில் சிக்கினர்.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் டி.இளையராஜா கூறுகையில், "இந்த விபத்தில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். ஒருவரைக் காணவில்லை. 14 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். இவர்களில் சிகிச்சை முடிந்து 2 பேர் பத்திரமாக வீடு சென்றடைந்தனர். காணாமல் போன நபரைத் தேடும் பணி நடந்து வருகிறது. நேற்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய மீட்புப் பணி தொடர்கிறது "என்றார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பணமும் வழங்க மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். விபத்து குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் பேசினேன். நிலைமையை அவ்வப்போது கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருந்தார். ம.பி. முதல்வரையும் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். ம.பி.யில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT