Published : 31 Mar 2023 07:47 AM
Last Updated : 31 Mar 2023 07:47 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்து பல்கலைக்கழகத்துக்கு, இந்திய - அமெரிக்க தொழிலதிபர் ரமேஷ் புதாடா 1 மில்லியன் டாலர் (ரூ.8.21 கோடி) நன்கொடை வழங்கியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமெரிக்க இந்து பல்கலைக்கழகம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு அங்குள்ள ஸ்டார் பைப் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரமேஷ் புதாடா 1 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார். அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.
இது குறித்து ரமேஷ் கூறுகையில், ‘‘இளைஞர்கள் வாழ்வில் சீக்கிரமே இந்து மதம் பற்றிய அறிவையும், புரிதலையும் பெறுவதற்காக இந்த நன்கொடையை வழங்கியுள்ளேன். இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியான, ஆக்கப்பூர்வமான வாழ்வை பெறமுடியும். நான் பாரம்பரிய இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், பல இந்து அமைப்புகளில் உறுப்பினர்களாக இருந்தாலும், இந்து மதத்தின் சாராம்சத்தை என்னால் உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியவில்லை’’என்றார்.
நல்லிணக்கத்தை கற்பிக்கிறது
இது குறித்து இந்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நாம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் உலகத்தில் உள்ள அனைவருடனும் நல்லிணக்கத்துடன் வாழ இந்து மதம் கற்பிக்கிறது.
இதர பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடுவதற்கான அறிவை வழங்கலாம். ஆனால் இந்து பல்கலைக்கழகம்தான், இந்து மத அறிவை வழங்கி வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை மாணவருக்கு கற்பிக்கிறது’’ என குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT