Published : 30 Mar 2023 10:19 PM
Last Updated : 30 Mar 2023 10:19 PM

ஹவுரா ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை: போலீஸ் குவிப்பு - மம்தா கண்டனம்

கோப்புப்படம்

ஹவுரா: இன்று (மார்ச் 30) நாடு முழுவதும் ஸ்ரீ ராம நவமி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதனால் சம்பவ இடத்தில் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் இருந்தனர் வன்முறையில் ஈடுபட்டவர்கள். வன்முறையை தடுக்கும் நோக்கில் அந்த இடத்தில் போலீஸ் படை அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளது. இதை செய்தவர்கள் தேச விரோதிகள் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இருதரப்புக்கு இடையிலான மோதல்தான் வன்முறைக்கு காரணம் என தெரிகிறது.

இந்த வன்முறையில் பல வாகனங்கலுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த அதிகளவில் காவலர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இந்த வன்முறை தொடர்பாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோக்கள் மூலம் இதனை தெரிந்து கொள்ள முடிகிறது.

மேற்கு வங்கத்தின் காசிபாரா பகுதியில் இந்த வன்முறை நடைபெற்றுள்ளது. நிலைமையை சமாளிக்க காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த வன்முறையில் காவல் துறையின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

“இந்த நாச செயலை செய்தவர்கள் தேசத்தின் விரோதிகள். இதன் பின்னால் உள்ளவர்கள் நிச்சயம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. நான் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க மாட்டேன். எப்போதுமே ஹவுராவை பாஜக குறிவைத்து வருகிறது. அதே போல பார்க் சர்க்கஸ் மற்றும் இஸ்லாம்பூரையும் அவர்கள் குறிவைத்து வருகிறார்கள். அனைவரும் அவரவர் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என மம்தா தெரிவித்துள்ளார்.

இதனை பாஜக மறுத்துள்ளது. இது தொடர்பாக பாஜகவின் சுவேந்து அதிகாரி தெரிவித்தது. “இந்த வன்முறைக்கு மாநில முதல்வர் மம்தாவும், மாநில நிர்வாகமும்தான் காரணம். இதன் பின்னால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராம நவமி ஊர்வலத்தை அமைதியான முறையில் வன்முறை ஏதும் இல்லாமல் நடத்துமாறு மம்தா சொல்லி இருந்தார். மேற்கு வங்க மாநிலத்திற்கு உரிய நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பதாகவும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியும் விடுவிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து கொல்கத்தாவில் இரண்டு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போராட்டம் நேற்று (மார்ச் 29) தொடங்கியது.

நாடு முழுவதும் ராம நவமி கொண்டாட்டம் அமைதியான முறையில் நடந்தது. குஜராத் மாநிலத்தின் வதோதராவில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x