Published : 30 Mar 2023 05:22 PM
Last Updated : 30 Mar 2023 05:22 PM
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள கோயில் படிக்கட்டு கிணற்றின் கூரை சரிந்து விழுந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட12 பேர் உயிரிழந்தனர். 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தூரில் உள்ள பெலாஷ்வர் மகாதேவ் கோயிலுள்ள பழமையான பாவ்டி என்ற கிணற்றின் கூரை சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 30-க்கும் அதிகமானவர்கள் சிக்கியிருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
பெலாஷ்வர் கோயிலில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 17 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை தலைமை போலீஸ் அதிகாரி மகராந்த் தேஷ்கர் உறுதி செய்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) ராம நவமியை முன்னிட்டு பெலாஷ்வர் மகாதேவ் கோயிலில் அதிகமான பக்தர்கள் வழிபாட்டிற்காக கூடினர். அப்போது படிக்கட்டு கிணற்றின் கூரை மேல் நின்றிருந்த பக்தர்களின் கணம் காரணமாக கிணறு சரிந்து விழுந்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து பகிரப்பட்ட வீடியோவில், கிணற்றில் விழுந்தவர்களை கயிறு மற்றும் ஏணிகள் துணையுடன் மீட்கும் பணிகள் பதிவாகியுள்ளது.
விபத்து குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், "இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. மற்றவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது கவலையை பகிர்ந்துள்ளார். இது குறித்த தனது ட்விட்டர் பதிவில், "இந்தூர் சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் ஜியிடம் பேசி நிலைமையை அறிந்து கொண்டேன். மாநில அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றது. பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் டி.ராஜா கூறுகையில், மீட்புப்பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும், நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT