Published : 30 Mar 2023 02:05 PM
Last Updated : 30 Mar 2023 02:05 PM

“ராமர் வெறும் சிலையல்ல... அவர் நமது நாட்டின் அடையாளம்” - ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: பகவான் ராமர் நமது நாட்டின் அடையாளம் என்றும், அவர் கல் அல்லது மரத்தால் ஆன வெறும் சிலை அல்ல என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராமநவமியை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது, ''அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்டமான ஆலயம் எழுப்புவதற்கான நிலை உருவானபோது பலரும் பல்வேறு விதமான யோசனைகளைத் தெரிவித்தார்கள். அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட வேண்டும் என்று சிலர் கூறினார்கள். சிலரோ, அங்கு பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்றார்கள். வேறு சிலரோ அங்கு தொழிற்சாலை அமைக்கலாம் என யோசனை தெரிவித்தார்கள். இவர்கள் எல்லாம் பகவான் ராமரை புரிந்து கொள்ளாதவர்கள்; அவரை தழுவாதவர்கள்.

பகவான் ராமர் கல் அல்லது மரத்தில் உருவான வெறும் சிலை அல்ல. அவர் இந்த நாட்டின் கலாச்சாரத்தின் - நம்பிக்கையின் மையம். நாம் மருத்துவமனை கட்டுவோம்; பள்ளிகள் கட்டுவோம்; தொழிற்சாலைகள் அமைப்போம். அதுபோலவே ஆலயங்களையும் எழுப்புவோம்.

வட கிழக்கு மாநிலங்களில் முன் எப்போதும் இல்லாத அமைதி தற்போது ஏற்பட்டிருக்கிறது. அந்த பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவ சிறப்புச் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வட கிழக்கு மாநிலங்கள் டெல்லிக்கு தொலைவில் இருப்பவை அல்ல. டெல்லியின் இதயத்தில் இருப்பவை.

பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம்; அவர்களுக்கு கல்வி கொடுப்போம் எனும் மத்திய அரசின் திட்டம் தற்போது ஒரு இயக்கமாக மாறி இருக்கிறது. தற்போது நமது ராணுவத்தின் ஒரு அங்கமாக பெண்கள் மாறி இருக்கிறார்கள் என்பதை ராணுவ அமைச்சராக என்னால் கூற முடியும். அவர்களால் ராணுவம் வலிமைப் பெற்று வருகிறது. தற்போது அவர்கள் போர் விமானங்களை இயக்குகிறார்கள். பீரங்கிகளை அவர்கள் இயக்குவதற்கும் நான் தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறேன். ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்தையும், ராணுவத்தின் வலிமையையும் பெருக்க முடிகிறது. தற்போதைய புதிய இந்தியாவில் மேட்டுக்குடி சிந்தனைக்கு இடமே இல்லை'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x