Published : 30 Mar 2023 12:20 PM
Last Updated : 30 Mar 2023 12:20 PM

“மோடியை குற்றவாளியாக்க சிபிஐ எனக்கு நெருக்கடி கொடுத்தது...”- அமித் ஷா பேச்சு

கோப்புப்படம்

புதுடெல்லி: "ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் நடந்த போலி என்கவுன்ட்டரில் மோடியை குற்றவாளியாக்க அவருக்கு எதிராக என்னைத் திருப்ப சிபிஐ அதிகாரிகள் எனக்கு நெருக்கடி கொடுத்தார்கள்" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர், தான் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் தன்னிடம் நடந்த சிபிஐ விசாரணையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அது மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வருகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் விதமாக இருந்தது.

நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது: ''ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மத்திய புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். அதனால் நானே பாதிக்கப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சி எங்கள் மீது ஊழல் வழக்குகளை பதிவு செய்யவில்லை. நான் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது அங்கே ஒரு என்கவுன்ட்டர் நடந்தது. அது தொடர்பாக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிபிஐ என்னை கைதும் செய்தது.

அந்த விசாரணையின் போது 90 சதவீத கேள்விகள் நான் ஏன் வருத்தப்படுகிறேன் என்பதாகவே இருந்தது. அவர்கள் இதற்கு நரேந்திர மோடிதான் காரணம் என்று நான் சொன்னால் என்னை விட்டுவிடுவதாக கூறினார்கள். அப்போது நாங்கள் கறுப்பு உடையணிந்து போராட்டம் நடத்தவில்லை. நாடாளுமன்றத்தை முடக்கவில்லை. நரேந்திர மோடிக்கு எதிராக சிறப்பு புலனாய்வு அமைக்கப்பட்டது.பின்பு உச்ச நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது.

90 நாட்களுக்கு பின்னர், எனக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி உயர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது. என்னுடைய வழக்கு மும்பையில் நடந்தது. அரசியல் அழுத்தம் காரணமாகவே என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று கூறி நீதிமன்றம் என் மீதிருந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.

இன்றிருக்கும் சிதம்பரம், சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி எல்லோரும் அப்போதும் இருந்தார்கள். அந்த விசாரணை முழுவதும் அவர்கள் மோடியின் பெயரைச் சொல்லும் படி என்னை வற்புறுத்தினார்கள். நான் ஏன் அவரின் பெயரைச் சொல்ல வேண்டும். என்னால் பல அப்பாவி போலீஸார் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இப்போது அதே காங்கிரஸ் தங்களின் விதியை நினைத்து அழுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார்கள். நாங்கள் ஒரு போதும் கறுப்பு உடையில் வீதியில் இறங்கிப் போராடவில்லை. நீங்கள் நிரபராதி என்றால் சட்டத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.'' இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x