Last Updated : 30 Mar, 2023 08:06 AM

 

Published : 30 Mar 2023 08:06 AM
Last Updated : 30 Mar 2023 08:06 AM

வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக யூடியூபில் வீடியோ பதிவேற்றம்: பிஹாரில் சரணடைந்த மணிஷ் தமிழக போலீஸாரிடம் ஒப்படைப்பு

முக்கிய குற்றவாளியாக மணிஷ் காஷ்யப்

புதுடெல்லி: தமிழகத்தில் பிஹார் உள்ளிட்ட வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாகக் கடந்த மாதம் புகார் எழுந்தது. இதுதொடர்பாக பல போலி வீடியோக்கள் வெளியாயின. இதுதொடர்பாக பிஹார் சட்டப்பேரவையில் பாஜகவினர் பிரச்சினை எழுப்பினர். தமிழகத்திலும் சர்ச்சை கிளம்பியது.

இப்பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் பிஹார் மாநில அரசுகள் ஒன்றிணைந்து குழுக்களை அமைத்து கடும் நடவடிக்கையில் இறங்கின. இதையடுத்து இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் மணிஷ் காஷ்யப். பிஹார்வாசியான இவர் 4 வருடங்களாக நடத்தி வரும் யூடியூப் சேனலில் அரசு களுக்கு எதிராக தவறான கருத்து களை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்காக அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது. பணம் சம்பாதிக்க தமிழகத்தில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ காட்சிகளை தயாரித்துள்ளார். இதுபோல், மணிஷின் சேனலில் 30 போலி காட்சிகள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதனால், மணிஷ் உள்ளிட்ட 11 பேர் மீது மார்ச் 7-ம் தேதி பிஹார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில், 6 பேர் சிக்கிவிட மணிஷ், கடந்த சனிக்கிழமை மேற்கு சாம்பரன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவர் மீது மதுரையிலும் வழக்குகள் உள்ளன. எனவே, அவரை மதுரைக்கு அழைத்துச் செல்ல தமிழக காவல் துறை பிஹார் வந்தனர். அவர்களிடம் பிஹார் போலீஸார் மணிஷை ஒப்படைத்தனர். இதையடுத்து, நேற்று மதியம் 2.20 மணிக்கு மணிஷை விமானத்தில் அழைத்துக் கொண்டு போலீஸார் தமிழகம் புறப்பட்டனர். மணிஷை போலீஸார் மதுரை நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த உள்ளனர்.

பாட்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பிஹார் அரசியல்வாதிகளால்தான் எங்கள் மாநிலவாசிகளுக்கு வெளியில் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. தங்கள் மக்கள் மீது பிஹார் அரசியல்வாதிகளுக்கு சிறிதும் அக்கறை இல்லை’ என்று குற்றம் சாட்டினார்.

பிஹாரில் பதிவாகியுள்ள வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் 13 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில், மணிஷின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய உபேந்தர் சஹானியை திருப்பூர் போலீஸார் கடந்தவாரம் பாட்னா சென்று கைது செய்து அழைத்து வந்தனர். கிருஷ்ணகிரியில் பதிவான வழக்கில் தொடர்புடைய நபரான ராகேஷ் திவாரிஇன்னும் கைது செய்யப்பட வில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x