Published : 30 Mar 2023 06:31 AM
Last Updated : 30 Mar 2023 06:31 AM
புதுடெல்லி: ஜனநாயகத்தின் இரண்டாவது உச்சி மாநாட்டை தென் கொரியா நடத்தியது. இதில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கோஸ்டா ரிகா அதிபர் ரோட்ரிகோ சாவ்ஸ் ரோப்லஸ், ஜாம்பியா அதிபர் ஹகைன்டி, நெதர்லாந்து பிரதமர் மார் ரூட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். இதில் ‘ஜனநாயகம் வழங்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட வளம்’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
தலைவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை, உலகின் மற்ற நாடுகளில் ஏற்படுவதற்கு முன்பே, பண்டைய இந்தியாவில்இருந்தது. மக்களின் முதல் கடமையை, தங்களின் தலைவர்களை தேர்வு செய்வதுதான் என மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. விரிவான ஆலோசனை அமைப்புகள் மூலம் அரசியல் அதிகாரங்கள் இருந்ததாக எங்களின் புனித வேதங்கள் கூறுகின்றன. பண்டைய இந்தியாவில் குடியரசு மாநிலங்கள் இருந்ததற்கான பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. அங்கு ஆட்சியாளர்கள் வாரிசு அடிப்படையில் இல்லை. இந்தியா, உண்மையிலேயே ஜனநாகத்தின் தாய்.
அது ஒரு உணர்வு
ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டும் அல்ல. அதுஒரு உணர்வு. அது ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மற்றும் ஆசைகளும் சமஅளவில் முக்கியமானது என்பதை அடிப்படையாக கொண்டது. அதனால்தான் இந்தியாவில், ‘அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி’ என்பது எங்களின் வழிகாட்டி தத்துவமாக உள்ளது.
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பருவநிலை மாற்றத்துக்கான போராட்டம், நீர்வள பாதுகாப்பு அல்லது அனைவருக்கும் சுத்தமான சமையல் எரிவாயு வழங்குவது ஆகியவற்றில், ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்திய மக்களின் கூட்டு முயற்சிகள் ஊக்கம் அளிக்கின்றன.
கரோனா பரவல் சமயத்தில், இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பாக இருந்தனர். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 200 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை சாத்தியமாக்கினர். பல கோடி டோஸ் தடுப்பூசிகள் உலக நாடுகளுடன் பகிரப்பட்டன. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற வசுதேவ குடும்பகத்தின் ஜனநாயக உணர்வு தான் இதற்கு வழிகாட்டியது.
உலகளாவிய சவால்கள் பல இருந்தாலும், இன்று பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. இதுவே, உலகில் ஜனநாயகத்துக்கு மிகச் சிறந்த விளம்பரம். ஜனநாயகத்தால் எதையும் வழங்க முடியம் என்பதை இதுவே கூறுகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT