Published : 30 Mar 2023 08:47 AM
Last Updated : 30 Mar 2023 08:47 AM
புதுடெல்லி: லட்சத்தீவு மக்களவை தொகுதி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி இழப்பை மக்களவை செயலகம் ரத்து செய்து அறிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக லட்சத்தீவு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர் முகமது ஃபைசல். கொலை முயற்சி வழக்கில் இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை கவரட்டி நீதிமன்றம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்து மக்களவை செயலகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், சிறைத் தண்டனையை எதிர்த்து முகமது ஃபைசல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கேரள நீதிமன்றம் இவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடையை அண்மையில் விதித்தது.
இருப்பினும், தகுதி இழப்பு உத்தரவை மக்களவைச் செயலகம் ரத்து செய்யாமல் இருந்தது.
இந்நிலையில், தகுதி இழப்பை எதிர்த்து முகமது ஃபைசல் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வர இருந்தது. இதனிடையே, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி இழப்பு ரத்து செய்யப்பட்டு மக்களவை செயலகம் நேற்று அறிவித்துள்ளது
இதுதொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது. சிறை தண்டனை பெற்று இருந்ததால் முகமது ஃபைசலின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது சிறைத் தண்டனைக்கு கேரள நீதிமன்றம் கடந்த 25-ம் தேதி இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தின்படி அவரது தகுதியிழப்பு ரத்து செய்யப்படுகிறது. அவர் மக்களவை உறுப்பினராகத் தொடரலாம். இவ்வாறு மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT