Published : 29 Mar 2023 12:55 PM
Last Updated : 29 Mar 2023 12:55 PM

ராகுல் காந்தி சட்டத்திற்கு மேலானவரா?- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

புதுடெல்லி: ராகுல் காந்தி சட்டத்திற்கு மேலானவரா என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ''பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக நீதிமன்றம் ராகுல் காந்தியை தண்டித்திருக்கிறது. ஆனால், நீதிமன்றம் செய்தது தவறு என அவர் கூறுகிறார்.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்துவிட்டதாலேயே இந்த நாட்டை ஆட்சி செய்வது தனது பிறப்புரிமை என ராகுல் காந்தி கருதுகிறார். அரசியல் சாசனம், நீதிமன்றம், நாடாளுமன்றம் என அனைத்திற்கும் மேலாக ராகுல் காந்தி தன்னை கருதிக்கொள்கிறார். நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் மேலாக அவர் தன்னை கருதிக்கொள்கிறார். எந்த ஒரு நீதிமன்றமும் தனக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது என அவர் எண்ணுகிறார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ராகுல் தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தான் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்துள்ளதால் அந்த சட்டம் தனக்கு பொருந்தாது என அவர் நினைக்கிறார். ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதற்குக் காரணம் அவரது ஆணவம்தான்.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, அனைத்து ஊழல்வாதிகளும் தற்போது ஒரு குடையின் கீழ் வந்திருக்கிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம் இந்த அரசை; நாட்டில் தற்போது உருவாகி இருக்கிற புதிய எழுச்சியை தடம் புரளச் செய்ய வேண்டும்; தொந்தரவு செய்ய வேண்டும் என்பதுதான். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எந்த அளவுக்கு நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதையும், அரசு அமைப்புகள் எந்த அளவுக்கு பலவீனப்படுத்தப்பட்டன என்பதையும் இவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நாட்டின் பிரதமர் வெளிநாடு சென்றிருந்தபோது, மசோதா நகலை கிழிப்பதுதான் அமைப்புகளை பலப்படுத்தும் செயலா என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். மசோதா நகலை கிழித்ததன் மூலம் அனைத்து அமைப்புகளுக்கும் மேலாக ராகுல் காந்தி தன்னை கருதிக்கொண்டிருக்கிறார் என்பது நிரூபணமாகி உள்ளது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x