Published : 29 Mar 2023 12:21 PM
Last Updated : 29 Mar 2023 12:21 PM

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் | மே.10 வாக்குப்பதிவு; மே.13 வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று (மார்ச் 29) தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தார்.

அதன்படி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

கர்நாடக தேர்தல்: சில முக்கிய தேதிகள்:

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் ஏப் 13
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஏப் 20
வேட்புமனு பரிசீலனை ஏப் 21
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஏப் 24
வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மே 10
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே 13

ஆண் வாக்காளர்களே அதிகம்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான ஆண் வாக்காளர்கள்: 2.62 கோடி, பெண் வாக்காளர்கள்: 2.59 கோடி. ஆண் வாக்காளர்களே அதிகம். மொத்த வாக்காளர்கள்: 5,21,73,579 (5 கோடியே 21 லட்சம்).

தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நகர்ப்புற வாக்குச்சாவடிகள் 20,886. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 36 தொகுதிகள் பட்டியலின வேட்பாளர்களுக்கும், 15 தொகுதிகள் பழங்குடிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 12.15 லட்சம் என்றளவில் உள்ளது. இது கடந்த 2018ஐ விட 32 சதவீதம் அதிகமாகும். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் 16,976 வாக்காளர்கள் 100 வயதை எட்டியவர்கள், கடந்தவர்கள் ஆவர்.

மாற்றுத்திறனாளிகள் 5.55 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க 9.17 லட்சம் முதன்முறை வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். 2023 ஏப்ரல் 1 ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியானவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

எதிர்பார்ப்புகளும், சந்தேகங்களும்.. கர்நாடகாவில் கடந்த மே 2018ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அங்கு தொங்கு சட்டப்பேரவை உருவானது. பாஜக தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. காங்கிரஸ் 80, ஜேடிஎஸ் 37 சீட்கள் வைத்திருந்தன. காங்கிரஸ் அதிக சீட்கள் வைத்திருந்தாலும் கூட மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் குமாரசாமியை முதல்வராக்கியது. ஆனால் 2019 ஜூலையில் எம்எல்ஏ.,க்கள் கட்சித் தாவலால் அந்த ஆட்சி கலைந்தது. பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா முதல்வரானார். ஆனால் அவர் ஜூலை 2021ல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பசவராஜ் பொம்மை முதல்வரானார். தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் கூட அது மீண்டும் அதனைத் தக்கவைக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதேபோல் கடந்த தேர்தலைப் போல் தொங்கு சட்டப்பேரவை அமையுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. 3 கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன. மஜத, ஆம் ஆத்மி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவர்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன‌. இருப்பினும் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையே தான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x