Published : 29 Mar 2023 11:32 AM
Last Updated : 29 Mar 2023 11:32 AM
புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 5 மாதங்களுக்கு பின்னர் தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,903 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 2,151 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 11,903 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரத்து 925 ஆக உள்ளது. ஒரு நாளில் 1,200 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றால் மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் தலா மூன்று பேரும், கர்நாடகாவில் ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 848 ஆக உள்ளது.
இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.65 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT