Published : 29 Mar 2023 06:20 AM
Last Updated : 29 Mar 2023 06:20 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமது உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது உள்ளிட்டோர் மீதுகுற்றம் சாட்டப்பட்டது. கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக வழக்கறிஞர் உமேஷ் பால் இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அவர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப் பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அத்திக் அகமது உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உமேஷ் பால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கிலும் அத்திக் அகமது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த சூழலில் உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் உமேஷ் பால் கடத்தல் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக, குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அத்திக் பலத்த பாதுகாப்புடன் பிரயாக்ராஜ் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
17 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் நீதிபதி தினேஷ் சந்திர சுக்லா தீர்ப்பினை வழங்கினார். இதன்படி முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது, அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசிஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் அத்திக் அகமதுவின் தம்பி காலித் அசிம் உட்பட 7 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
ஐந்து முறை எம்எல்ஏவாகவும் ஒருமுறை எம்பியாகவும் பதவி வகித்துள்ள அத்திக் அகமது மீது 101 வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதல்முறையாக ஆள்கடத்தில் வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே அத்திக் அகமது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. "உ.பி. போலீஸார் என்கவுன்ட்டரில் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளனர். எனவே எனக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்திய நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT