ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டம்
புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, எம்.பி பதவி இழப்புக்கு அவர் ஆளானார். இதையடுத்து, அரசு பங்களாவை காலி செய்யுமாறு மக்களவை செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அரசின் இத்தகைய அடுத்தடுத்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு சத்தியாகிரகப் போராட்டங்களை நடத்தப் போவதாக காங்கிரஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதனைத் தெரிவித்தார். இன்று முதல் நடைபெற உள்ள இந்த சத்தியாகிரகப் போராட்டத்திற்கு 19 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் இதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
