Published : 28 Mar 2023 12:31 PM
Last Updated : 28 Mar 2023 12:31 PM
புதுடெல்லி: கடுமையாகப் போராட தயாராகுங்கள் என்று பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டாம் கட்டத்தில் நடைபெறும் முதல் பாஜக நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ, பாஜக எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதை அடுத்து, அதற்கு முக்கிய காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெ.பி. நட்டா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''கட்சி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது; வெற்றியின் சுவையை அதிகம் சுவைத்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மற்றொரு பக்கத்தில் எதிர்ப்பும் அதிகரிக்கும். எனவே, கடுமையான போராட்டத்திற்கு தயாராக வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.
அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை மீது நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், "பாஜக ஆட்சி 9 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளதை அடுத்து வரும் மே 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்குச் சென்று ஏதாவது ஒரு வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT