Published : 27 Mar 2023 05:30 PM
Last Updated : 27 Mar 2023 05:30 PM
புதுடெல்லி: கறுப்பு நிற ஆடைகள் அணிந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் பேரணி மேற்கொண்டனர். நாடாளுமன்ற வளாகம் தொடங்கி விஜய் சவுக் பகுதி வரை இந்தப் பேரணி நடந்தது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும், ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம் உள்ளிட்டவற்றை முன்வைத்து இந்தப் பேரணி நடத்தப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தலைமையில் பேரணி நடந்தது. முன்னதாக, இவர்களுடன் காங்கிரஸ், தோழமைக் கட்சிகள் எம்.பி.க்கள் இணைந்து நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்னால் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
வாய்மையே வெல்லும், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பிரம்மாண்ட பேனர்களை ஏந்தியிருந்தனர். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து விஜய் சவுக் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கெளதம் அதானியின் சொத்து எப்படி இவ்வளவு அதிகரித்தது. வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எத்தனை முறை பிரதமர் மோடி தன்னுடன் அதானியை அழைத்துச் சென்றிருக்கிறார். இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பிரதமரிடம் பதிலே இல்லை. எங்களுக்குத் தேவை அதானி விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்க வேண்டும் என்பதே. ஆனால், இதற்கு அரசு ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அவர்கள் மறுக்கிறார்கள் என்றால் எங்கோ ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
அதேபோல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ஒரே காரணம்தான் இருக்கிறது. பாஜகவுக்கு ராகுலின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதே நோக்கம். அதனால்தான் 2019 வழக்கை தேடிப் பிடித்து விசாரித்து தீர்ப்பு வழங்கி தகுதி நீக்கம் செய்துள்ளனர். ராகுல் பேசியது கர்நாடகாவின் கோலார் மாநிலத்தில், ஆனால் தங்களின் சாதகத்திற்காக வழக்கை குஜராத்தின் சூரத்துக்கு மாற்றினார்கள். இப்போது தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். இன்றைய தினம் ஜனநாயகத்தின் கறுப்பு தினம். நாங்கள் ஏன் இங்கு கறுப்பு ஆடைகளில் வந்துள்ளோம் தெரியுமா? பிரதமர் மோடி நாட்டில் ஜனநாயகத்திற்கு முடிவு கட்டுகிறார் என்பதைத் தெரிவிக்கவே கறுப்புச் சட்டையில் வந்துள்ளோம். முதலில் சுயாதீன அமைப்புகளுக்கு முடிவு கட்டினார். அப்புறம் சிபிஐ, அமலாக்கப் பிரிவு மூலமாக எதிர்ப்பாளர்களை பணிய வைத்தார்" என்றார்.
இதுவரை இவ்விவகாரத்தில் ஒதுங்கி நின்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று காங்கிரஸ் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். பிஆர்எஸ், சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்களும் ஆதரவு அளித்தனர்.
காங்கிரஸ் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்திலும், பேரணியிலும் கலந்து கொண்டது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஜவஹர் சிர்கார் கூறுகையில், "எங்களின் ஆதரவு ஜனநாயக விரோத தாக்குதல்களுக்கானது. ஜனநாயக விரோதத்தை கூட்டாக எதிர்ப்போம் என்பதற்கான அடையாளமே இது" என்றார். இதற்கு பதிலளித்த கார்கா, "ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்வரும் அனைவரையும் காங்கிரஸ் வரவேற்கும்" என்றார்.
ராகுல் தகுதி நீக்கம் பின்னணி: கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதன் காரணமாக, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பதவியையும் அவர் இழந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...