Published : 27 Mar 2023 02:21 PM
Last Updated : 27 Mar 2023 02:21 PM
புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரச்சினையை நீதிமன்றம் வாயிலாக அணுகாமல் சாவர்க்கர் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவது ஏன் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், "தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை ராகுல் காந்தி சட்டபூர்வமாகத்தான் அணுக வேண்டும். வீர் சாவர்க்கர் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவதை விடுத்து ராகுல் காந்தி நீதிமன்ற நடவடிக்கையை நீதிமன்றம் வாயிலாகவே அணுக வேண்டும். ஆனால், குதிரைப் பந்தயத்தில் ஓட ஒரு கழுதையை இழுக்கிறார்கள். இந்த விவகாரத்தில் காங்கிரஸார் சுய பரிசோதனை செய்ய வேண்டும். இந்திய மக்கள் நீங்கள் யார் என்பதைப் பொருத்தே உங்களை மதிப்பீடு செய்வார்கள்" என்றார்.
கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதன் காரணமாக, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பதவியையும் அவர் இழந்துள்ளார்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ், திமுக மற்றும் ஆதரவுக் கட்சி எம்.பி.க்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்தனர். ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே முடங்கியது. மாநிலங்களவை 2 மணி, வரையிலும் மக்களவை 4 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கு வெளியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "நாங்கள் ஏன் இங்கு கறுப்பு ஆடைகளில் வந்துள்ளோம் தெரியுமா? பிரதமர் மோடி நாட்டில் ஜனநாயகத்திற்கு முடிவு கட்டுகிறார் என்பதைத் தெரிவிக்கவே கறுப்புச் சட்டையில் வந்துள்ளோம். முதலில் சுயாதீன அமைப்புகளுக்கு முடிவு கட்டினார். அப்புறம் சிபிஐ, அமலாக்கப் பிரிவு மூலமாக எதிர்ப்பாளர்களை பணிய வைத்தார்" என்றார்.
முன்னதாக, தகுதி நீக்கத்துக்குப் பின் ராகுல் காந்தி கூறும்போது, “நான் சாவர்க்கர் இல்லை: எனது பெயர் ராகுல் காந்தி. நான் சாவர்க்கர் இல்லை. நான் யாரிடமும் மன்னிப்பு கோர மாட்டேன்” என்று கூயிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT