Published : 27 Mar 2023 05:35 AM
Last Updated : 27 Mar 2023 05:35 AM
லக்னோ: பாஜகவுக்கு எதிரான போராட்டத் தில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத்தின் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதன்காரணமாக மக்களவை உறுப்பினர் பதவியை அவர் இழந்துள்ளார். அவருக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது கூட்டணியை உருவாக்க முயற்சித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் நேற்று நிருபர்களிடம் கூறியிருப்பதாவது: பல்வேறு மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ளன. பாஜகவுக்கு எதிராக போராடி வரும் இந்த மாநில கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும். மாநிலகட்சிகளை முன்னிறுத்தி பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் பக்க பலமாக இருக்க வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மிகவும் வலுவாக இருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை, நாங்கள் தோற்கடிப்போம். உத்தர பிரதேசத்தில் பாஜக தோல்வியைத் தழுவினால் ஒட்டுமொத்த நாட்டிலும் அந்த கட்சி தோல்வியைத் தழுவுவது உறுதி. மக்களவைத் தேர்தலில் மாநில கட்சிகள் பங்களிப்பால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். தேர்தலுக்கும் பிறகு தேசிய அரசியலில் சமாஜ்வாதி பொறுப்பான கட்சியாக செயல்படும்.
இன்றைய சூழலில் ராகுலுக்கு ஆதரவாக சமாஜ்வாதி செயல்படுகிறதா என்பது முக்கிய விஷயம் கிடையாது. நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இதுதான் முக்கியம். ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை கண்டித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த கட்சி அகிம்சை வழி போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
மாநில கட்சிகளால் தேசிய கட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. மத்தியில் ஆளும் பாஜக அரசால்தான் அனைத்து கட்சிகளும் பாதிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஏவி விடப்படுகிறது. தேசிய அளவில் புதிய கூட்டணியை உருவாக்குவது எங்கள் பணி கிடையாது. ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT