Published : 27 Mar 2023 04:06 AM
Last Updated : 27 Mar 2023 04:06 AM

தமிழகம் - குஜராத் இடையே நீண்டகால உறவு: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: தமிழகம் - குஜராத் இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பிணைப்பு இருக்கிறது என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கடந்த 2014-ல் பிரதமராக பதவியேற்றது முதல், மாதம்தோறும் கடைசி ஞாயிறன்று வானொலியில் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 99-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அவர் நேற்று பேசியதாவது:

உயிரிழந்த பிறகு ஒருவரது உடலை தானமாக அளித்தால் 8 முதல் 9 பேருக்கு புதிய வாழ்க்கை கிடைக்கும். பஞ்சாபின் அமிர்தசரஸை சேர்ந்த சுக்பீர் சிங் சந்து – சுப்ரித் கவுர் தம்பதியின் 39 நாள் பெண் குழந்தை அபாபத் இதய நோயால் உயிரிழந்தது. அந்த சோகத்திலும், தம்பதியர் தங்கள் குழந்தையின் சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளனர். ஜார்க்கண்டின் சிநேகலதா சவுத்ரி (63) உயிரிழந்த பிறகு அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவர்களது தியாகத்தை பாராட்டுகிறேன்.

உறுப்பு தானத்தை எளிமையாக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை, சட்டத்தை வரையறுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் குறித்து அறிந்திருப்பீர்கள். ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் முதல் பெண் ஓட்டுநராக அவர் தேர்வாகியுள்ளார்.

ஆவணப் பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா, இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸ் ஆகியோரது ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படம் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. இரு பெண்களும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மகளிர் கிரிக்கெட் அணி சாதனை: பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜோதிர்மயி மொகந்தி, ஐயுபிஏசி விருதை வென்று சாதனை படைத்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, டி-20 உலகக் கோப்பையை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

நாகாலாந்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக சல்ஹுட்டோனு குர்ஸே, ஹெகானிஜகாலு ஆகிய 2 பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் குர்ஸே, நாகாலாந்தின் முதல் பெண் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

துருக்கியில் பூகம்பம் ஏற்பட்டபோது, இந்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த பெண்கள் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். அவர்களது சாகசம், திறமைகளை உலகமே பாராட்டியது. ஐ.நா. அமைதிப் படையிலும் இந்திய வீராங்கனைகள் திறம்பட பணியாற்றுகின்றனர். இந்தியாவின் முப்படையிலும் பெண்கள் தங்களது வீரத்தை பறைசாற்றி வருகின்றனர்.

குரூப் கேப்டன் ஷாலிஜா தாமி, போர் பிரிவில் முக்கிய ஆணைகளை பிறப்பிக்கும் முதல்பெண் விமானப் படை அதிகாரியாகஉயர்ந்துள்ளார். ராணுவ கேப்டன் சிவா சவுகான், உறைய வைக்கும் சியாச்சின் பனிச் சிகரத்தில் பணியாற்றும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியாவில் பெண்களின் சக்தி அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் உத்வேகம் தருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் எம்எஸ்ஆர் ஆலிப் ஹவுசிங் சொசைட்டி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் சூரிய மின் சக்தியை மட்டும் பயன்படுத்த உறுதி பூண்டுள்ளனர். டாமன் தீவில் உள்ள தீவ்மாவட்ட மக்கள், தங்கள் அனைத்துதேவைக்கும் சூரிய மின் சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்த விழிப்புணர்வு நாடு முழுவதும் பரவ வேண்டும்.

சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்: நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை பாதுகாக்க பல்வேறுநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏப்.17 முதல் 30-ம் தேதி வரை குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ நடக்க உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் 'ஒரே பாரதம் உன்னதபாரதம்' என்ற உணர்வை மேலோங்கச் செய்கிறது.

குஜராத்தின் சவுராஷ்டிராவுக்கும், தமிழகத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்றுசிலர் நினைக்கலாம். குஜராத் – தமிழகம் இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பிணைப்புஇருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, குஜராத்தின் சவுராஷ்டிராவை சேர்ந்த மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர். இவர்கள் சவுராஷ்டிரா தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களது உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சமூக பழக்கம் ஆகியவைகுஜராத்தின் சவுராஷ்டிராவுடன் பொருந்திப் போகின்றன.

சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் குறித்து தமிழகத்தை சேர்ந்த பலர் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மதுரையை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் உணர்வுப்பூர்வமான, நீண்ட கடிதத்தை எழுதியுள்ளார். அவரது வார்த்தைகள், தமிழர்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளன.

முகலாயர்களின் கொடூர ஆட்சியில் இருந்து குவாஹாட்டிக்கு விடுதலை பெற்றுத் தந்த அசாம் மாவீரர்லாசித் போர்ஃபுகனின் 400-வதுபிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் ஹோலியில் தொடங்கி பல பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். ரமலான் புனித மாதம் தொடங்கியுள்ளது. சில நாட்களில் ராமநவமி கொண்டாட உள்ளோம். இதன் பிறகு மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகைகள் வருகின்றன. ஏப்ரலில் மகாத்மா ஜோதிபா புலே, பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாட உள்ளோம். அவர்களது போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டுகிறேன்.

சில இடங்களில் கரோனா அதிகரிக்கிறது. வைரஸ் பரவலை தடுக்கமுன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அடுத்த மாதம் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x