Published : 12 Sep 2017 08:14 AM
Last Updated : 12 Sep 2017 08:14 AM
இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ‘புளூ வேல்’ விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த மாணவர் ‘புளூ வேல்’ என்ற தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டை வடிவமைத்துள்ளார். இந்த விளையாட்டை விளையாடி பலர் விபரீத முடிவுகளைத் தேடி கொண்டனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.எஸ்.பொன்னையா. இவர் வழக்கறிஞர் ஜெயா சகீன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
‘புளூ வேல்’ என்ற ஆன்லைன் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இதில் 50 இலக்குகள் வழங்கப்பட்டு இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும்படி மிரட்டுகின்றனர். இந்தியாவிலும் அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஈடுபட்டு பலியாகி வருகின்றனர்.
மும்பை, புனே, இந்தூர், சென்னை என பல நகரங்களில் இதுவரை 200 பேர் வரை இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. உலகம் முழுவதும் இந்த விளையாட்டில் ஈடுபட்டு 300 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பிரபலமாகி வருகிறது. மத்திய அரசு இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். அதற்கு முன்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் என்.எஸ்.பொன்னையா கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜெயா சகீன், இந்த மனுவின் முக்கியத்துவத்தை தெரிவித்து உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ‘புளூ வேல்’ ஆன்லைன் விளையாட்டு பரவுவதை தடுக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். விரைவில் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT