Published : 26 Mar 2023 04:32 AM
Last Updated : 26 Mar 2023 04:32 AM
புதுடெல்லி: 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
இந்நிலையில், புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு மத்திய அரசு தற்போது கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது. தற்போதைய நடைமுறையின் படி, புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதுவே, அவர்களது வருமானம் ரூ.7,00,100- ஆக இருந்தால், அதாவது ஆண்டு வருவாயில் வெறும் ரூ.100 கூடியிருந்தால், அவர்கள் ரூ.25,010 வரி செலுத்த வேண்டும்.
இந்நிலையில், வருமான வரி விலக்கு வரம்பான ரூ.7 லட்சத்துக்கு மேல் சற்று கூடுதலாக வருவாய் உடையவர்களுக்கு நிவாரண வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி ஆண்டு வருவாய் ரூ.7,00,100 இருந்தால், கூடுதல் வருமானமான ரூ.100 - ஐ மட்டும் வரி செலுத்தினால் போதும் என்று கூறப்படுகிறது. ரூ.7,27,700 வரையில் ஆண்டு வருமானம் கொண்டவர்கள் இந்த நிவாரண வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மத்திய அரசு மக்களவையில் 64 திருத்தங்கள் கொண்ட புதிய நிதி மசோதாவை நிறைவேற்றியது. அதில் இந்த மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரிமுறையின் கீழ் ரூ.3 லட்சம் வரையில் வரி கிடையாது. ரூ. 3 லட்சம் - ரூ.6 லட்சம் வரையில் 5%, ரூ.6 லட்சம் - ரூ.9 லட்சம் வரை 10%, ரூ.9 லட்சம் - ரூ.12 லட்சம் வரை 15 %, ரூ.12 லட்சம் - ரூ.15 லட்சம் வரை 20%, ரூ.15 லட்சம் மேல் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. புதிய வரி முறையில் 6 வரம்புகள் இருந்த நிலையில் தற்போது அது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பழைய வரி முறையில் எந்த மாற்றமும் கொண்டு வரப் படவில்லை. பழைய வரி முறையில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இதுவரையில் பழைய வரி முறை அடிப்படை யானதாக இருந்த நிலையில், இனி புதிய வரி முறை அடிப் படையானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT