Published : 25 Mar 2023 10:46 PM
Last Updated : 25 Mar 2023 10:46 PM
டெல்லி: அதானி குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் குறித்த எனது கேள்விகளை திசைதிருப்பவே தகுதி நீக்கம் மற்றும் சிறைத்தண்டனை போன்ற நாடகம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக நான் கவலைப்படவே இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை, தொடர்ந்து எம்.பி.பதவி பறிப்புக்குப் பிறகு முதன் முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “பிரதமர் மோடிக்கும் தொழில் அதிபர் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். எனது கேள்விகளை திசைதிருப்பவே தகுதி நீக்கம் மற்றும் சிறைத்தண்டனை போன்ற நாடகம் நடத்தப்படுகிறது.
இவர்கள் என்னை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. பாஜகவினர் எல்லோருக்கும் பயப்படுவது வழக்கம். ஆனால் நான் அவர்களுக்கு பயப்படபோவதிவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளும் என்னை தடுத்து நிறுத்தாது. கேள்வி கேட்பதையும் நான் நிறுத்தமாட்டேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்.
அதானிக்கும் பிரதமருக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆதாரங்களுடன் கேள்வியாக எழுப்பினேன். ஆதாரமாக, அதானியின் விமானத்தில் ரிலாக்ஸ் செய்த பிரதமரின் படத்தைக் காட்டினேன். பாதுகாப்புத் துறையில் அதானியின் நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு குறித்த ஆவணங்களை அளித்தேன்.
ஆஸ்திரேலிய வங்கி (ஸ்டேட் வங்கி) தலைவருடன் பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் படங்கள் என ஆதாரங்களை அளித்தேன். இந்த சம்பவங்களுக்குப் பின்பே பாஜக தனது வேலையை ஆரம்பித்தது. நாடாளுமன்றத்தில் எனது பேச்சுக்களும் நீக்கப்பட்டன. எனினும், சபாநாயகருக்கு இரண்டு கடிதங்கள் எழுதி, எனது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதையும் சுட்டிக்காட்டி அனுப்பினேன்.
பாதுகாப்புத் துறை, விமான நிலைய அதானி முதலீடுகள் குறித்த பத்திரிகை செய்திகள், சட்ட ஆவணங்களையும் இணைத்து இதுவே எனது பேச்சுக்கு ஆதாரமான அடித்தளம் என சபாநாயகருக்கு விரிவான விளக்கமும் கொடுத்தேன். ஆனால், எனது பேச்சுக்கள் எதுவும் நாடளுமன்றத்தில் பதிவாகவில்லை.
நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற வெளிநாட்டு சக்திகளின் உதவியை நான் கோருவதாக என் மீது சில அமைச்சர்களே குற்றம் சாட்டினார்கள். இது மிகவும் அபத்தமான கூற்று. நான் ஒருபோதும் அப்படி பேசவில்லை. இங்கிலாந்தில் நான் நடத்திய அனைத்து உரையாடல்களையும் நீங்கள் பார்க்கலாம்... உண்மையில், இது இந்தியாவின் பிரச்சனை, இந்தியா இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றுதான் பேசினேன்.
அதற்காக பாஜக தலைவர்கள் நான் மன்னிப்புக் கேட்க சொன்னபோது இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்குமாறு மக்களவை சபாநாயகரை அணுகினேன். எம்.பி. என்ற முறையில் யாரேனும் ஒருவர் குற்றம் சாட்டினால், எனது நிலைப்பாட்டை தெரிவிப்பது எனது உரிமை என்று அவருக்கு கடிதம் எழுதினேன். முதல் கடிதத்திற்கு பதில் அளிக்கப்படவில்லை. விரிவான விவரங்களுடன் இரண்டாவது கடிதம் எழுதினேன். இன்னும் அதற்கு பதில் இல்லை. நேரில் சந்தித்தும் முறையிட்டேன். அதற்கு, சபாநாயகர் சிரித்துக்கொண்டே, ‘என்னால் அதைச் செய்ய முடியாது' என்று கூறிவிட்டார்.
அதானி குறித்த எனது உரை பிரதமருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனை நான் அவரது கண்களில் பார்த்தேன். அதன் காரணமாகவே முதலில் திசை திருப்பல்களை செய்தார்கள். அடுத்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன். நான் நிரந்தரமாகவே தகுதிநீக்கப்பட்டாலும் நான் எனது வேலையை தொடர்ந்து செய்வேன். நான் நாடாளுமன்றத்திற்குள் பேசுகிறேனா அல்லது வெளியே பேசுகிறேனா என்பது அல்ல முக்கியம். நாட்டுக்காக தொடர்ந்து போராடுவேன்.
நாட்டின் ஜனநாயக அமைப்பை பாதுகாப்பதே என பணி. அதாவது, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உள்ள அமைப்புகளை பாதுகாப்பது, ஏழைகளுக்காக குரல் கொடுப்பது, பிரதமர் மோடி உடனான உறவை தவறாகப் பயன்படுத்தும் அதானி போன்றவர்கள் குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது ஆகியவையே எனது பணி.'' இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக, இங்கிலாந்து உரைக்கு பாஜக சொல்வதுபோல் மன்னிப்பு கேட்பீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல், "நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT