Published : 25 Mar 2023 05:18 PM
Last Updated : 25 Mar 2023 05:18 PM

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம்: பாஜக

பாட்னா: பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை பாஜக மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நேற்று பறிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி - தொழிலதிபர் அதானி இடையே உள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை பாதுகாக்க தனது குரலை ஒடுக்கும் நோக்கில் அரசு செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பை அடுத்து, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் அதானி விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மற்றவர்களைப் பற்றி குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசிய ராகுல் காந்தி, அதில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயல்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசிய ராகுல் காந்தி, அதற்கு மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்தே அவருக்கு சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட இந்த வழக்கில் இத்தகைய சூழல் உருவாவதைத் தடுக்க காங்கிரஸ் வழக்கறிஞர்கள் ஏன் முயலவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிப்பதில் காட்டிய ஆர்வத்தை அக்கட்சியின் வழக்கறிஞர்கள் இதில் ஏன் காட்டவில்லை எனத் தெரியவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த முதல் நபர் ராகுல் காந்தி கிடையாது. இதுவரை 32 பேர் இத்தகைய பதவி இழப்பை எதிர்கொண்டு இருக்கிறார்கள். பாஜகவைச் சேர்ந்த 6 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழந்திருக்கிறார்கள். லாலு பிரசாத் யாதவ் பதவியை இழந்திருக்கிறார். ராகுல் காந்திக்கு எதிராக இன்னமும் 7 அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தகுதி நீக்க நடவடிக்கையை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த ராகுல் காந்தி முயல்கிறார். தன்னை ஒரு தியாகியாக சித்தரித்துக் கொள்கிறார். விரைவில் நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கிலேயே அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்திய ராகுலின் செயலை பாஜக, மக்கள் முன் எடுத்துவைக்கும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவர் எவ்வாறு வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம். இதற்காக நாடு தழுவிய பிரசாரத்தை பாஜக முன்னெடுக்கும்'' என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். | வாசிக்க > ''தொடர்ந்து கேள்வி கேட்பேன்; ஜனநாயகத்திற்காகப் போராடுவேன்'' - ராகுல் காந்தி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x