Published : 25 Mar 2023 11:04 AM
Last Updated : 25 Mar 2023 11:04 AM
புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக இன்று (சனிக்கிழமை) பகல் 1 மணிக்கு ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அவதூறு வழக்கு ஒன்றில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் வியாழக்கிழமை ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 1951-ன் கீழ் அவர், வயநாடு எம்.பி. பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக இன்று மதியம் 1 மணிக்கு ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக, தகுதி நீக்க நடவடிக்கைக்கு பின்னர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,"'இந்தியாவின் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்பதற்காக நான் போராடுகிறேன். அதற்காக எந்த ஒரு விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்'' எனத் தெரிவித்திருந்தார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற வயநாடு நாடாளுமன்றத் தொகுதி தற்போது காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார். இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “எனது மதம் உண்மை, அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது கடவுள். அகிம்சை அதை அடையும் வழி. இது காந்தியடிகளின் பொன் மொழி” என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT