Published : 25 Mar 2023 05:11 AM
Last Updated : 25 Mar 2023 05:11 AM
புதுடெல்லி: ரஃபேல் வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் ராகுல் காந்தி மாறவில்லை. அதன் காரணமாகவே இப்போது அவர் எம்பி பதவியை இழந்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், நாட்டுக்கு சேவை செய்ய மக்களின் காவலாளியாக இருக்கிறேன். ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடும் அனைவரும் காவலாளிதான்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. அதோடு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் சமூக வலைதள பக்கங்களில் தங்களது பெயர்களுக்கு முன்னால் காவலன் என்ற அடைமொழியை சேர்த்தனர்.
இதனிடையே ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசியபோது, “காவலன் என்று சொல்லி கொள்பவரை திருடன் என நீதிமன்றமே கூறிவிட்டது’’ என்று விமர்சித்தார்.
இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் மீனாட்சி லேகி உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினார்.
ராகுல் விளக்கம்: “என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தின் மாண்பை மதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை’’ என்று அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, ‘‘ரஃபேல் தீர்ப்புவிவகாரத்தில் ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம், இனிவரும் காலங்களில் வார்த்தைகளில் கவனமாக இருக்கும்படி கண்டிப்புடன் கூறியது. ஆனால் அதன் பிறகும் அவர்திருந்தவில்லை. அதன் காரணமாகவே சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், அவரது எம்.பி.பதவியும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT