Published : 24 Mar 2023 06:03 AM
Last Updated : 24 Mar 2023 06:03 AM
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் போட்டியை சமாளித்து பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை கவர காங்கிரஸ் புதிய வியூகத்தை வகுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. 3 கட்சிகளும் தேர்தல் பிரச் சாரத்தை தொடங்கியுள்ள நிலை யில், வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன.
மஜத, ஆம் ஆத்மி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவர்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
பாஜகவும், காங்கிரஸும் இன்னும் சில தினங்களில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கின்றன. பாஜகவை பொறுத்தவரை கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே, இந்த தேர்தலிலும் முஸ்லிம், கிறிஸ்துவர் போன்ற சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்காது என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை கவரும் வகையில் 224 தொகுதிகளிலும் இந்து வேட்பாளர்களை களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவின் இந்த மத ரீதியான போட்டியை சமாளிக்க காங்கிரஸ் தனது வியூகத்தை மாற்றியுள்ளது. காங்கிரஸில் முஸ்லிம், கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு எத்தனை சீட் வழங்குவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 18 வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் சீட் வழங்கியது.
வரும் தேர்தலில் அந்த வேட்பாளர்களின் எண்ணிக்கையை 13 முதல் 15 இடங்களாக குறைக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதனால் பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சிங்கை முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் அண்மையில் பெங்களூருவில் சந்தித்து பேசினர்.
அப்போது, வருகிற சட்டப் பேரவை தேர்தலில் முஸ்லிம்களின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப வேட்பாளர் தேர்வில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என கோரினர். இதேபோல கிறிஸ்துவ அமைப்பினரும் தங்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், “கட்சியின் மேலிடத் தலைவர்கள் ஆலோசித்து இது தொடர்பாக முடிவெடுப்பார்கள். இன்னும் ஓரிரு தினங்களில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT