Published : 23 Mar 2023 11:52 PM
Last Updated : 23 Mar 2023 11:52 PM
பஞ்சாப்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் இருக்கும் தனது கணவர் குறித்து உருக்கமான குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக, "நவ்ஜோத் சிங் சித்து செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது உங்களை விட அதிகமாகத் துன்பப்பட வைக்கிறது. வழக்கம் போல் உங்கள் வலியைப் போக்கும் முயற்சியாக இதைப் பகிர்ந்துகொள்கிறேன். இது மோசமானது என்று தெரியும்.
மீண்டும் மீண்டும் நீதி மறுக்கப்படுவதைக் கண்டு உங்களுக்காகக் காத்திருந்தேன். உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது, ஆனால் அது உங்களை மீண்டும் மீண்டும் சோதிக்கும். மன்னிக்கவும், உங்களுக்காக காத்திருக்க முடியாது, ஏனெனில் எனக்கு புற்றுநோய் உறுதியாகியுள்ளது. இன்று அறுவை சிகிச்சைக்கு செல்கிறேன். யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் இது கடவுளின் திட்டம். அது சரியானதாகத் தான் இருக்கும்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இரண்டாம் கட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1988 ஆம் ஆண்டு, நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது நண்பர் ரூபீந்தர் சாந்து ஆகிய இருவரும் பாட்டியாலாவைச் சேர்ந்த குர்மான் சிங் (65) என்பவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சித்து, குர்மான் சிங்கை காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியுள்ளார். இதில் குர்மான் சிங் காயமடைந்தார். பின்னர் அவர் உயிரிழந்தார். கைகலப்பாக ஆரம்பித்த மோதல் உயிர்ப் பலியில் முடிந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்க, தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT