Published : 23 Mar 2023 09:01 PM
Last Updated : 23 Mar 2023 09:01 PM

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜாமீனும்: காங்கிரஸின் நகர்வு முதல் எதிர்வினைகள் வரை

புதுடெல்லி: கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 30 நாளைக்குள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் எனக் கூறி தீர்ப்பை நிறுத்தி வைத்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கியது.

வழக்கு பின்னணி: காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கும், அக்கட்சிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் இந்தத் தீர்ப்புக்கான வழக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, அதாவது 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, "எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப் பெயராக இருக்கிறது?" என்று பேசியிருந்தார்.

தனது இந்தப் பேச்சின் மூலம் ராகுல் காந்தி, ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி, சூரத்தின் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி, அங்குள்ள நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் இந்த வழக்கினை 2019-ம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்திருந்தார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499, 500 கீழ் தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கில், கடந்த 2021ம் ஆண்டு சூரத் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். வியாழக்கிழமை தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், காலையிலேயே ராகுல் காந்தி சூரத் நகருக்கு வந்திருந்தார்.

நான்காண்டுகளுக்கு முந்தைய இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கடந்த வாரத்தில் கேட்டு முடித்திருந்த நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா, தீர்ப்பை இன்று (மார்ச் 23 ஆம் தேதிக்கு) ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் காலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் விவரம்: > குற்றம்சாட்டப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு அறிவுரை வழங்கப்பட்ட பின்னரும் அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

> குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அந்தவகையில் அவர் பெரும்பான்மையான மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்த முடியும். அதனால் இந்த வழக்கில் குற்றத்தின் செயல் மிகவும் பெரியதாக பார்க்கப்படுகிறது.

> அவருக்கு குறைவான தண்டனை வழங்குவது தவறான முன்னுதாரணமாகி, சமூகத்திற்கு தவறான செய்திகளை தரலாம்.

இந்த நிலையில் தீர்ப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி, "எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது மதம், அகிம்சையே அதனை அடைவதற்கான பாதை" என்ற மகாத்மா காந்தியின் மேற்கோளை கூறிப்பிட்டிருந்தார்.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த பிரியங்கா காந்தி, "பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம் போன்றவைகளைத் திணிப்பதன் மூலம் ராகுல் காந்தியின் குரலை நசுக்கப் பார்க்கின்றன. எனது சகோதரர் ஒரு போதும் பயப்பட மாட்டார். அவர் உண்மையைப் பேசி வாழ்பவர், தொடர்ந்து உண்மையை மட்டுமே பேசுவார். அவன் தொடர்ந்து இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருப்பார். உண்மையின் சக்தியும், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் அன்பும் அவருடன் இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

எதிக்கட்சிகள் எதிர்வினை: ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது குறித்து பெரும்பாலன எதிர்க்கட்சிகள் மவுனமாகவே இருந்தன. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் கூட தீர்ப்பு குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

தன்னுடைய கட்சி அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது காங்கிரஸ் கண்டிக்காத நிலையில், இந்தத் தீர்ப்பை முதல் ஆளாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலே கண்டித்தார். அவர் கூறுகையில், "எதிர்க்கட்சிகளையும் அதன் தலைவர்களையும் ஒழிக்க சதி நடந்து கொண்டிருக்கிறது. பாஜக அல்லாத தலைவர்கள் மீது வழக்கு பதிய சதி நடந்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் ஒரு அவதூறு வழக்கில் அவரை சிக்க வைப்பது முறையில்லை. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் தீர்ப்பை ஏற்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை மூலம் எதிர்க்கட்சியினர் மீது சோதனை நடத்தி, பல்வேறு நகரங்களில் ஆதாரமற்ற வழக்குகளை போட்டு அவர்களை ஒழிக்க பெரிய சதி நடக்கிறது. இது இந்த நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பு, அரசியலுக்கு பெரிய அச்சுறுத்தலாகும்" என்று தெரிவித்துள்ளார்.

"இந்தத் தீர்ப்பு பேச்சுரிமை அச்சுறுத்தலில் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது" என்று திமுகவின் டிஆர் பாலு தெரிவித்திருந்தார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கியிருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை ஜனநாயகத்திற்கு கவலையளிக்கக் கூடியது என்றும், பாஜக அல்லாத அரசுகள் மற்றும் தலைவர்கள் சதித்திட்டங்களுக்கு பலியாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சி(பாஜக) எதிர்வினை: ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: வாளால் ஏற்படும் காயத்தை விட வார்த்தைகளால் ஏற்படும் காயம் கொடுமையானது மிகவும் ஆழமானது என்பதை ராகுல் காந்தி இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தில் இருந்து பொது இடத்தில் பேசும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

டெல்லி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தீர்ப்பு குறித்த ராகுல் காந்தியின் மேற்கோளை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், ராகுல் காந்தி என்ன சொன்னார்? அவர் உண்மையையும், அகிம்சையையும் நம்புவதாகச் சொன்னார். அப்படியென்றால் அவர் மக்களை அவமதிக்கலாமா?, நாட்டை அவமதிக்கலாமா? ராகுல் காந்திக்கு யாரையாவது அவமதிக்கவும் மரியாதையில்லாமல் பேச உரிமை உண்டு என்றால் அவரது பேச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரவும் உரிமை உண்டு.

ஒரு தனிநபரே, அமைப்போ அவதூறான கருத்துக்கள், செயல்களால் பாதிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடலாம் என இந்திய சட்டம் சொல்கிறது. ஆனால் காங்கிரஸ் அதற்கு எதிராக இருக்கிறது. அவர்கள் ராகுல் காந்தி மற்றவர்களை அவமதிக்க முழு சுதந்திரம் வேண்டும் என்கிறார்கள். அதை அனுமதிக்க முடியாது நாட்டில் சட்டம் இருந்தால் இது நடைமுறைப்படுத்தப்படும்" என்று அவர் பேசினார்.

காங்கிரஸ் எதிர்வினை: இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் சட்டப்படி போராடும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இப்படி நடக்கும் என்று எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும் ஏனென்றால் அவர்கள் நீதிபதிகளை மாற்றிக்கொண்டே இருந்தார்கள். எங்களுக்கு சட்டதின் மீது, நீதித்துறையின் மீது நம்பிக்கையுள்ளது. சட்டப்படி நாங்கள் இதனை எதிர்த்துப் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், "இந்த நேரத்தில் நான் உங்களுடன் துணைநிற்கிறேன். நீங்கள் ஏற்கெனவே இதுபோன்ற நியாயமற்ற தருணங்களையும், சோதனையா நேரங்களையும் கடந்து வந்திருப்பீர்கள். விதிமீறல்களை சரிசெய்து நீதி வழங்குவதில் நமது நீதித் துறை வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நீங்கள் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சத்யமேவ ஜெயதே" என்று கூறியுள்ளார்.

"எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து வந்த பாஜகவின் போக்கு, தற்போது ஜனநாயக உரிமைகளையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக்கிறது. இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வாசிக்க > இறுதியில் நீதியே வெல்லும்: ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x